25 நாட்கள் கடுமையாக உழைத்தால் 23 தொகுதிகளிலும் பா.ம.க.வின் வெற்றி உறுதி தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்


25 நாட்கள் கடுமையாக உழைத்தால் 23 தொகுதிகளிலும் பா.ம.க.வின் வெற்றி உறுதி தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்
x
தினத்தந்தி 13 March 2021 2:47 AM IST (Updated: 13 March 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

25 நாட்கள் கடுமையாக உழைத்தால் 23 தொகுதிகளில் பா.ம.க.வின் வெற்றி நிச்சயம் என்று தொண்டர்களுக்கு, டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்றும் (நேற்று முன்தினம்) நாம் வெற்றிகரமாக அறிவித்திருக்கிறோம். பா.ம.க. வேட்பாளர் பட்டியலை பார்க்கும்போது அது அனுபவ முதிர்ச்சி, இள ரத்தம், மகளிர் சக்தி, சிறுபான்மைக்கான பிரதிநிதித்துவம், பட்டியலினப் பன்முகத்தன்மை என அனைத்தும் கலந்த கலவையாக காட்சியளிக்கிறது.

சட்டசபை தேர்தலில் 23 இடங்கள் மட்டுமே பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் மாவட்டம் சார்ந்தும், தொகுதிகளை சார்ந்தும், வெற்றி வாய்ப்புகளை கருத்தில் கொண்டும் தான் வாய்ப்பு வழங்க முடியும் என்பதால் தான் 23 வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என்று பொருள் அல்ல. அவர்கள் இன்னும் உயர்ந்த பதவிகளுக்குக்கூட தகுதியானவர்கள் தான். அதற்கான சூழலும் வாய்ப்பும் இப்போது அமையவில்லை என்பது தான் உண்மை.

திண்ணை பிரசாரம்

இன்று (நேற்று) முதல் 25 நாட்களுக்கு நாம் கடுமையாக உழைத்தால் சட்டசபையின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில் தொடங்கி ஆத்தூர் (திண்டுக்கல்) வரை அனைத்து 23 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஏற்கனவே பல்வேறு கால கட்டங்களில் கூறியவாறு நமது சாதனைகளை கூறித்தான் இந்த தேர்தலை சந்திக்கவேண்டும்; மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். அதற்கு திண்ணை பிரசாரம் தான் மிகச்சிறந்த ஆயுதம். தமிழகத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுத்து தருவதற்காக தேர்தலுக்குப்பிறகு டாக்டர் ராமதாஸ் போராடவிருக்கிறார் என்பதை மக்களுக்கு புரியும் வகையில் விளக்க வேண்டும். அனைத்து தோழமை கட்சியினரையும் அரவணைத்து செயல்பட வேண்டும்.

23 தொகுதிகளில் வெற்றியை...

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு சிறு மனக்குறையும் இல்லை. அவரது நல்லாட்சி தொடர வேண்டும். அவரே மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் நிலவுகிறது. அந்த எண்ணத்தை திண்ணமாக்கும் வகையில் நமது களப்பணி அமைய வேண்டும். இதை உணர்ந்து பா.ம.க.வினர் களப்பணியை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த 25 நாட்களும் மக்கள் சந்திப்பை மட்டுமே தலையாய கடமையாக கொண்டு 23 தொகுதிகளில் பா.ம.க.வின் வெற்றியையும், 234 தொகுதிகளிலும் நமது கூட்டணியின் வெற்றியையும் உறுதி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story