உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும் - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 March 2021 9:12 AM IST (Updated: 13 March 2021 9:30 AM IST)
t-max-icont-min-icon

உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். 

இந்நிலையில் உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று சீட்டு கிடைக்காத திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.  ஜனநாயக அறப்போர்க்களமான தேர்தல் களத்திற்கு கழகத்தின் தீரர்கள் ஆயத்தமாகி விட்டார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடன் இல்லாத கழகத்தின் முதல் சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் என்பது இதயத்தை அழுத்தினாலும், அதன் ஒவ்வொரு துடிப்பிற்கும் கர்த்தாவாக அவர்தானே இருக்கிறார்; அவர்தானே நமக்கு விசையேற்றி நாள்தோறும் வேகமாக இயக்குகிறார்; அவர்தானே கழக உடன்பிறப்பு ஒவ்வொருவர் முகத்திலும் ஒளி உமிழ்ந்து பிரகாசிக்கிறார் என்கிற உணர்வுடனும் உத்வேகத்துடனும் - மிகுந்த கவனத்துடன் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்தேன்.

 உங்களில் ஒருவனான என்னையும், பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களையும் உள்ளடக்கிய கழக வேட்பாளர்கள் 173 பேர் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலைத் தலைவர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்திலும், பேரறிஞர் அண்ணா அருகில் அவர் துயில் கொண்டிருக்கும் வங்கக் கடலருகில் உள்ள கலைஞர் ஓய்விடத்திலும் வைத்து அவரது இதயபூர்வமான வாழ்த்துகளைப் பெற்று, அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருந்த உடன்பிறப்புகள் முன்பாகவும் - ஊடகத்தினர் அறியும் வகையிலும் வெளியிட்டேன். அல்ல.. அல்ல... அங்கே சொன்னது போலவே, வேட்பாளர் பட்டியல் மட்டுமல்ல, கழகத்தின் வெற்றிப் பட்டியலை வெளியிட்டேன்.

இந்த வெற்றிப் பட்டியல் 173 என்ற எண்ணிக்கையுடன் நிறைவடைந்துவிடவில்லை. தோழமைக் கட்சியினர் போட்டியிடும் 61 தொகுதிகளையும் உள்ளடக்கியதுதான் நமது வெற்றிப் பட்டியல். 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே கழக வேட்பாளர்கள்தான். சில தொகுதிகளில் சின்னங்கள் மாறியிருக்கலாம். ஆனால் ஒருங்கிணைந்த வலிமை மிகுந்த நமது எண்ணம் ஒன்றுதான்; அது ஒருபோதும் மாறாதது. மதவாதப் பாசிச சக்திகளுக்குத் துளியளவும் தமிழ்நாட்டில் இடம்கொடுக்காமல், அந்த பிற்போக்குச் சக்திகளுக்குத் துணை நிற்கின்ற அடிமைக் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக விரட்டி அடிப்பது ஒன்றே தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் ஒற்றை இலக்கு. அந்த ஒற்றை இலக்கினை வென்றெடுக்க 234 வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். அதில் கழகத்தின் சார்பில் 173 வீரர்கள் நிற்கிறார்கள்.

ஏழாயிரத்துக்கும் அதிகமான உடன்பிறப்புகள் தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கொடுத்திருந்த நிலையில், ஒவ்வொரு தொகுதிக்குமாக நேர்காணல் செய்து, கள நிலவரங்களை ஆய்வுக்குட்படுத்தி, நமது வலிமை - மாற்றார் நிலைமை ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்து இந்த வெற்றிப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்களைக் கொண்ட தி.மு.க. எனும் அரசியல் பேரியக்கத்தில், ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் விருப்பமனு அளித்திருந்தாலும், கழகம் நேரடியாகப் போட்டியிடுகின்ற தொகுதிகள் 173 என்பதால், ஒரு தொகுதிக்கு ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பையும் கொண்டவனாக உங்களில் ஒருவனான நான் இருக்கிறேன். அந்த நெருக்கடி எத்தகைய தன்மையது என்பதை உடன்பிறப்புகளான நீங்களும் அறிவீர்கள்.

கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தகுதி வாய்ந்தவர்கள்தான். அந்தத் தகுதியின் அடிப்படையில்தான் விருப்பமனு அளித்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் அழகான எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்வார். வீட்டு பீரோவில் ஏராளமான பட்டுப்புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், விழா ஒன்றிற்குச் செல்லும்போது இல்லத்தரசியார் அவற்றில் ஒன்றை மட்டும்தான் எடுத்து, உடுத்திக் கொண்டு செல்ல முடியும். அடுத்து ஒரு விழாவுக்குச் செல்லும்போது, பீரோவில் உள்ள மற்றொரு பட்டுப்புடவையை உடுத்துகின்ற நல்வாய்ப்பு அமையும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லியிருக்கிறார். எல்லாப் புடவைகளையும் ஒரே நேரத்தில் உடுத்திக் கொள்வது  முடியாத காரியம். பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற தலைவர் கலைஞரின் வழிகாட்டுதலில் வளர்த்தெடுக்கப்பட்ட உடன்பிறப்புகளில் ஒருவனான நானும் அந்த எடுத்துக்காட்டையே இந்த நேரத்தில் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

கழகம் எனும் பெட்டகத்தில் உள்ள உடைகள் அனைத்தும் உயர்ந்தவை, தரமானவை - உடுத்துவதற்கு எழில் கூட்டுபவை என்பதில் எந்தச் சந்தேகமும் யாருக்கும் இல்லை. அதில் 173 ஆடைகளை மட்டும் இந்தச் சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான வெற்றிப் பட்டியலுக்குப் பயன்படுத்தியுள்ளேன். இன்னும் ஏராளமான தரமான - தூய்மையான - பயன்தரத்தக்க உடைகள் நிறைந்துள்ளன. நேர்காணல் வாயிலாக அவை என் உள்ளத்தை அலங்கரித்துள்ளன. அடுத்தடுத்து இன்னும் பல களங்களும் வாய்ப்புகளும்  இருக்கின்றன. அப்போது உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வேன் என்ற உறுதியினை வழங்குகிறேன். இந்த முறையே உடுத்தியாக வேண்டும் எனப் பிடிவாதம் பிடிப்பது கழகத்தினரின் இயல்பல்ல. “உன்னுடைய சுற்று வரும்வரை, நீ காத்திருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் (You should learn to wait till your turn comes)” என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை அறிந்திருப்பவர்கள் நீங்கள். அப்படிப் பிடிவாதம் பிடித்தால் நெருக்கடி ஏற்படுத்தினால் அத்தகையோர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனும் உயர்ந்த தகுதியை பெருமளவு இழந்து விடுகிறார்கள்.

அவர்களது கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு கேள்விக்குள்ளாகிவிடும். கையளவு உள்ளம், கடல் போல் ஆசை என்பதைப் போல, விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தானே! இதனை உணர்ந்து, என் அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, களம் நோக்கி கவனம் செலுத்தி, 234 தொகுதிகளிலும் வெற்றியை ஈட்டிட, அயர்வின்றிப் பணியாற்றிடப் பாசத்துடன் அழைக்கிறேன்.

தி.மு.கழகம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிற தொகுதிகளாக இருந்தாலும், கழகத்தின் சின்னமாம் உதயசூரியனில் தோழமைக் கட்சியினர் போட்டியிடுகின்ற தொகுதிகளானாலும், அவரவர் கட்சிக்குரிய சின்னங்களில் களம் காண்கிற தோழமைக் கட்சியினரின் தொகுதிகளானாலும், அனைத்துத் தொகுதிகளிலும் நமது வேட்பாளர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான். 6-ஆவது முறையாக அவர் முதலமைச்சர் பொறுப்பேற்கும் சாதனையைக் காண முடியாத வேதனை இன்னமும் ஆறாத வடுவாக நெஞ்சத்தில் இருந்து கொண்டிருக்கிறது. கடந்த முறை அந்த வாய்ப்பை இழந்த காரணத்தால், தலைவர் கலைஞர் அவர்களை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்தபோது அவருக்குக் கடற்கரையில் இடம் ஒதுக்கிட மறுத்த வஞ்சக ஆட்சியாளர்களின் கொடூர குணத்தையும் நெஞ்சம் மறக்கவில்லை. சட்டரீதியாகப் போராடி, பேரறிஞர் அண்ணா துயில்கொள்ளும் இடத்திற்கு அருகே தலைவர் கலைஞர் ஓய்வு கொள்வதற்கான இடத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றோம்.

அந்த வெற்றி முழுமையாக நிறைவேற வேண்டுமென்றால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வும் அதன் கூட்டாளிகளும் ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்படவேண்டும். தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் மகத்தான வெற்றி பெற்று, கழகத்தின் ஆட்சியை தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கையாக்க வேண்டும்.

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய தி.மு.கழக ஆட்சி - தலைவர் கலைஞர் வழிநடத்திய தி.மு.கழக ஆட்சி தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியை நோக்கிக் கொண்டு சென்றது. அனைத்து மக்களுக்குமான முழுமையான வாய்ப்புகளை வழங்கியது. அந்த வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் கடந்த பத்தாண்டுகளாக முடக்கிப்போட்டு, இருளில் தள்ளிய அ.தி.மு.க. ஆட்சிக்கு இனி இங்கே இடமில்லை என முடிவு கட்டிட, வெள்ளிக்கிழமை (மார்ச் 12) வெற்றி வேட்பாளர் பட்டியல் எனும் விடிவெள்ளி முளைத்தது. தேர்தல் முடிவுகளில், உதயசூரியன் உதிக்கும்; தமிழகம் எங்கும் புதுவெளிச்சம் பரவும்; தமிழர் வாழ்வில் விடியல் மலரும்.

வெற்றிப் பட்டியலைத் தொடர்ந்து, களத்தின் கதாநாயகனான கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியாக இருக்கிறது. திருப்புமுனை ஏற்படுத்திய திருச்சி சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்தும் தமிழ்நாட்டு மக்களின் நீடித்த நிலையான நலனுக்கானது! தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கு அறைகூவல் விடுப்பது! ஜனநாயகத்தையும் மாநில உரிமைகளையும் பாதுகாப்பதற்கானது! மக்களின் பேராதரவைப் பெற்றது! தேர்தல் களத்தில் வெற்றிக்குத் துணை நிற்பது!

நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுபோல, இந்தத் தேர்தல் களத்தில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெறுவது உறுதி. மக்களின் மனநிலையும் ஆதரவும் அதனை வெள்ளிடை மலை போல் வெளிப்படுத்துகிறது. ஆனால், அந்த வெற்றியை எளிதாக அடைவதற்கு விடமாட்டார்கள். அதிகார பலம் கொண்டவர்கள் அத்தனை தந்திரங்களையும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் செய்வார்கள். அவற்றை முறியடித்திட உங்களில் ஒருவனான நான் என் சக்திக்கு மீறி உழைக்கிறேன். உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும் ஒத்துழைப்பையும் விரும்பி வேண்டி எதிர்பார்க்கிறேன்.

வெற்றியன்றி வேறில்லை என்கிற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். மாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம். வரலாறு போற்றும்  வெற்றியை தலைவர் கலைஞர் நினைவிடத்தில் நாம் அனைவரும் காணிக்கையாக்குவோம்” என்று அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story