தமிழகத்தின் நிகழ்காலம், எதிர்காலத்தை மனதில் வைத்து தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு உள்ளது; மு.க.ஸ்டாலின் பெருமிதம்


தமிழகத்தின் நிகழ்காலம், எதிர்காலத்தை மனதில் வைத்து தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு உள்ளது; மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x
தினத்தந்தி 13 March 2021 9:53 PM GMT (Updated: 2021-03-14T03:23:40+05:30)

தமிழகத்தின் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து தி.மு.க. தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2-வது கதாநாயகன்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவை தேர்தலுக்கான களத்தில் நிற்கும் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை நேற்று (நேற்று முன்தினம்) வெளியிட்டேன். இதன் தொடர்ச்சியாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். பொதுவாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை ‘தேர்தல் கதாநாயகன்' என்று சொல்வார்கள். நாங்கள் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலையே சிலர் கதாநாயகன் என்றுதான் சொன்னார்கள். தற்போது 2-வது கதாநாயகனான தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்.

நிகழ்காலம், எதிர்காலம்
தி.மு.க. தோன்றிய காலத்தில் இருந்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. தேர்தல் அறிக்கை என்றால் அது தனிப்பட்ட கழகத்தின் விருப்பமாக மட்டும் இல்லாமல், தமிழக மக்களின் விருப்பமாகவே அமையும்.பல்வேறு தலைமுறைகள் தாண்டியும் இந்த தேர்தல் அறிக்கை பேசப்படும். தமிழகத்தின் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில், 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வாக்குறுதிகளாக உள்ளன. இவை அனைத்தும் பொதுமக்களை சென்றடையவேண்டும்.

தனி அமைச்சகம்
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்று பெயரிடப்படும். தலைவர் கருணாநிதியின் புகழ்பெற்ற வாசகம், “சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்” என்பதாகும். அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன் என்பதை தமிழக மக்களுக்கு எனது உறுதிமொழியாக வழங்குகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

உள்ளாட்சி தேர்தல்
பின்னர், உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தப்படுமா? என்று மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘உள்ளாட்சி தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அதனை அரைகுறையாக நடத்தி வைத்திருக்கிறார்கள். எந்த காரணம் கொண்டும் நடந்த தேர்தலை கலைக்க மாட்டோம். அ.தி.மு.க.வாக இருந்தால் அதை கலைப்பார்கள். நடைமுறையில் நாம் பார்த்திருக்கிறோம். தி.மு.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக அதை கலைக்கும் முயற்சியில் ஈடுபடமாட்டோம். மிச்சம் இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களை விரைவாக நடத்துவோம்’ என்று தெரிவித்தார்.

தொண்டர்களுக்கு வேண்டுகோள்
இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் 
கூறியிருப்பதாவது:-

தி.மு.க. வேட்பாளர்கள் 173 பேர் அடங்கிய பட்டியலை, தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும், அண்ணா அருகில் அவர் துயில் கொண்டிருக்கும் வங்கக்கடலருகில் உள்ள ஓய்விடத்திலும் வைத்து அவரது இதயபூர்வமான வாழ்த்துகளைப் பெற்று வெளியிட்டேன். அங்கே சொன்னது போலவே, வேட்பாளர் பட்டியல் மட்டுமல்ல, தி.மு.க.வின் வெற்றி பட்டியலை வெளியிட்டேன்.

இந்த வெற்றி பட்டியல் 173 என்ற எண்ணிக்கையுடன் நிறைவடைந்துவிடவில்லை. கூட்டணி கட்சியினர் போட்டியிடும் 61 தொகுதிகளையும் உள்ளடக்கியதுதான் நமது வெற்றி பட்டியல்.

மதவாத பாசிச சக்திகள்
மதவாத பாசிச சக்திகளுக்கு துளியளவும் தமிழ்நாட்டில் இடம்கொடுக்காமல், அந்த பிற்போக்கு சக்திகளுக்கு துணை நிற்கின்ற அடிமைக் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக விரட்டி அடிப்பது ஒன்றே தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஒற்றை இலக்கு.

இதை அடைய வேண்டுமென்றால் இந்த தேர்தலில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டாளிகளும் ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்படவேண்டும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் மகத்தான வெற்றி பெற்று, தி.மு.க.வின் ஆட்சியை தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் காணிக்கையாக்க வேண்டும்.

வெற்றி எளிதாக இருக்காது
ஆனால், அந்த வெற்றியை எளிதாக அடைவதற்கு விடமாட்டார்கள். அதிகார பலம் கொண்டவர்கள் அத்தனை தந்திரங்களையும், சதிகளையும், சூழ்ச்சிகளையும் செய்வார்கள். அவற்றை முறியடித்திட உங்களில் ஒருவனான நான் என் சக்திக்கு மீறி உழைக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும், ஒத்துழைப்பையும் விரும்பி வேண்டி எதிர்பார்க்கிறேன்.

வெற்றியன்றி வேறில்லை என்கிற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். மாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story