சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன். எல்லா தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர், முதல் முறையாக தேர்தல் போட்டி களத்தில் குதித்துள்ளார்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி மகுடம் சூட்டிய தொகுதியில், அவரது பேரனான உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் களப்பணியை நேற்று தொடங்கினார். அப்போது, அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் பாதிரியாரிடம் ஆசி பெற்று பிரசாரத்தை தொடங்கினார்.
மேலும் அந்த தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டையில் தி.மு.க. தேர்தல் பணிமனையை அவர் திறந்து வைத்தார். அங்கு தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று அவர்களது ஆதரவையும் திரட்டினர்.
பேட்டி
பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் தேர்தல் பிரசாரத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தொடங்கி விட்டேன். மக்கள் எழுச்சியுடன் இருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்துக்கு தயாராக இருக்கிறார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களின் குறைகளை கேட்டு, கண்டிப்பாக நிவர்த்தி செய்வேன்.
தேர்தலில் போட்டி போடுகிற எல்லா வேட்பாளர்களும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். நான் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்பதை, தேர்தல் நாளன்று பதிவாகும் வாக்குகளை வைத்து அப்போது நான் சொல்கிறேன்.
எல்லா தொகுதிகளிலும் பிரசாரம்
தி.மு.க. வெற்றி பெற வேண்டும். ‘உதயசூரியன்' சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய முழக்கம் ஆகும். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி கருணாநிதி 2 முறை வெற்றி பெற்ற தொகுதி ஆகும். எனவே நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். நான் எல்லா தொகுதிகளிலும் கண்டிப்பாக பிரசாரம் செய்வேன். வெளி மாவட்ட பிரசாரத்துக்காக நாளை (இன்று) புறப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story