தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 March 2021 5:37 AM IST (Updated: 16 March 2021 5:37 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை, 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 15-ந் தேதி (நேற்று) காலை வரை 59 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் ஒருவர் பெண்.

மாநிலத்தில் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, வருமான வரித்துறை ஆகியோர் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 109.45 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், சேலைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் பணம் மட்டும் ரூ.43.67 கோடியாகும்.

10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட பணம், பொருட்கள் பிடிபட்டால் அதுபற்றிய விசாரணையை வருமான வரித்துறையினர் மேற்கொள்வார்கள்.

வாக்காளர் அடையாள அட்டை

தமிழகத்தில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் (கடந்த ஜனவரி 20-ந் தேதியில் வெளியான பட்டியல்) சேர்க்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 16 லட்சத்து 69 ஆயிரத்து 919 வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் ‘ஸ்பீட் போஸ்ட்’ என்ற விரைவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

மீதம் 4 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு மட்டும் வாக்காளர் அடையாள அட்டைகளை அனுப்ப வேண்டும். அதை இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்குள் அனுப்பி விடுவோம். எனவே புதிய வாக்காளர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. அதன் பிறகும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவர்களுக்கும் அடையாள அட்டை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9-ந் தேதிவரைதான் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போதும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள், தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த பிறகுதான் எடுத்துக்கொள்ளப்படும்.

சி-விஜில் புகார்கள்

சி-விஜில் செயலி மூலம், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை யாரும் படம் பிடித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவலாக அனுப்பலாம். தேர்தல் விதிகளை மீறி போஸ்டர் ஒட்டுவது, பணம், பரிசுப் பொருள் வழங்குவது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, வாகன பயன்பாடு உள்ளிட்ட அனைத்து வகையான விதிமீறல் தொடர்பான தகவல்களை அனுப்பலாம்.

அனுமதி பெறாமல், தேர்தலுக்கான சுவர் விளம்பரம் செய்தது தொடர்பான புகார்கள்தான் அதிகம் வந்துள்ளன. அதிகபட்சமாக கரூர், கோவை மாவட்டங்களில் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதுவரை 1,120 புகார்கள் வந்துள்ளன. அதில் 695 புகார்களை சரிபார்த்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 1,324 முதல் தகவல் அறிக்கைகள் (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளன.

துப்பாக்கிகள் ஒப்படைப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி, கூட்டங்கள் நடத்துவது, வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு அனுமதிப்பது உள்பட 4,220 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 1,749 அனுமதி அளிக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களுக்கு இதுவரை 455 அனுமதி அளித்துள்ளோம்.

தடுப்புக்காவல் நடவடிக்கையின் கீழ் 6,659 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டம் ஒழுங்கை சரிவர பராமரிக்க முடியும். காவல் துறை மூலம் 511 சோதனைச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்து 724 உரிமம் உள்ள துப்பாக்கிகள் இதுவரை போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தபால் வாக்கு இல்லை

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் போன்றவர்கள் வாக்குச்சாவடிக்கு வராமல் வீட்டில் இருந்தபடி தபால் வாக்குகள் அளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதற்கான 12-டி விண்ணப்பத்தை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 738 எண்பது வயதுக்கு மேற்பட்டோரும், 38 ஆயிரத்து 324 மாற்றுத்திறனாளிகளும் வழங்கியுள்ளனர். இதற்கான கடைசி நாள் 16-ந் தேதி (இன்று) ஆகும். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கவில்லை.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், அவர்களின் பெயர், முகவரி இடம் பெற்றுள்ள தொகுதிக்குள் வசித்தால் மட்டும்தான் 12-டி விண்ணப்பத்தை அளிக்க முடியும். இந்த வாக்காளரின் வீட்டுக்கு 2 முறை வாக்குச்சாவடி அலுவலர்கள் வருவார்கள். தபால் ஓட்டுகளை பெறுவதற்கும் அங்கு செல்ல வேண்டும்.

எனவே அந்த வாக்காளர்கள் வேறு தொகுதி அல்லது பிற மாவட்டங்களுக்கு சென்று வசித்தால், 12-டி விண்ணப்பத்தை வாக்குச்சாவடி அலுவலர்களால் அங்கு கொண்டு செல்லவோ அல்லது தபால் ஓட்டுகளை அங்கு சென்று பெறவோ அவர்களால் முடியாது.

குற்ற வழக்கு விளம்பரம்

வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் இருக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் அவர்கள் அதுபற்றிய தகவல்களை 3 கட்டமாக விளம்பரமாக அறிவிக்க வேண்டும். வேட்புமனுவை திரும்பப்பெறும் நாளில் இருந்து 4 நாட்களுக்குள், அதாவது இம்மாதம் மார்ச் 23-ந் தேதியில் இருந்து 26-ந் தேதிக்குள் முதல் கட்ட விளம்பரத்தை வெளியிட வேண்டும்.

2-ம் கட்ட விளம்பரத்தை, 5 முதல் 8 நாட்களுக்குள், அதாவது 27-ந் தேதியில் இருந்து 30-ந் தேதிக்குள்ளாகவும்; 3-ம் கட்ட விளம்பரத்தை வேட்புமனுவை திரும்பப் பெறும் நாளில் இருந்து 9 நாட்களுக்கு பின் பிரசாரம் முடியும் நாளுக்குள், அதாவது 31-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 4-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும்.

பிரசாரத்தில் சிறுவர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் அலுவலருக்கு எதிராக அமைச்சர் ஒருவர் செயல்பட்டதாக வந்த செய்தி குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டிருக்கிறோம். அவரது அறிக்கை வந்ததும் அதுபற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது அதை தேர்தல் நடத்தும் அதிகாரி சரிபார்ப்பார். வேட்புமனு அல்லது பிரமாண பத்திரத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை பட்டியலிட்டு அதை சரி செய்துவிட்டு தாக்கல் செய்யும்படி அவர் அவகாசம் கொடுப்பார். திருத்தப்பட்ட அந்த வேட்புமனுவை கடைசி நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எனவேதான் இதுபோன்ற குறைபாடுள்ள வேட்புமனுக்கள், பிரமாண பத்திரங்களை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்த முடியாது. ஏனென்றால், குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம், மாநில அரசின் வசம் உள்ளது. எனவே இது தொடர்பாக புகார்கள் வருமானால் அரசினால் நடவடிக்கை எடுக்க முடியும்.

துணை ராணுவம் வருகை

இதுவரை 65 கம்பெனி துணை ராணுவம் வந்துள்ளது. கூடுதல் துணை ராணுவத்தினர் வரவுள்ளனர். தேர்தல் செலவின பிரச்சினையுள்ள வாக்குச்சாவடிகள், பதற்றமுள்ள வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அதிகாரிகள் அடையாளம் கண்டு வருகின்றனர். தேர்தல் செலவின பிரச்சினையுள்ள வாக்குச்சாவடிகளை செலவினப் பார்வையாளர்கள் அடையாளம் காண்பார்கள். பதற்றமுள்ள வாக்குச்சாவடிகளை பொதுப் பார்வையாளர்கள் வரும்போது, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்துவிட்டு முடிவு செய்யப்படும். அவர்கள் 18 அல்லது 19-ந் தேதியில் வருவார்கள்.

வேட்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டாலும் கூட, மாநில அரசு வகுத்துள்ள தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது, 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வது, மருத்துவமனையின் கண்காணிப்பில் இருப்பது உள்ளிட்ட நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு குறித்த நெறிமுறைகளை மாநில அரசுடன் இணைந்து நாங்கள் தீவிரமாக பின்பற்றுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, 5 தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள், பாடல்கள் அடங்கிய சி.டி.யை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். அப்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆனந்த், அஜய் யாதவ், மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story