கொரோனா பாதிப்பில்லாமல் தேர்தல் நடத்துவது எப்படி? பீகார் சுகாதார அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பில்லாமல் தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே தேர்தலை நடத்தியுள்ள பீகார் மாநில சுகாதார அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் உள்ள சூழ்நிலையிலும்கூட பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி இருந்தது.எனவே அங்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரவல் தடுப்பு மேலாண்மை குறித்த தகவல்களை அறிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விரும்பினார். எனவே அங்குள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டது.
அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பீகார் மாநிலத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் சுதீர்குமார், டாக்டர் ரோஹினி துர்பா ஆகியோர் தமிழகத்திற்கு வந்தனர். இங்கு தேர்தல் நடவடிக்கைகளின்போது மேற்கொள்ளப்படவுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
இந்தநிலையில் அவர்கள் இருவருடனும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டம் குறித்து சத்யபிரத சாகு கூறியதாவது:-
கொரோனா காலகட்டத்தில் முதலில் தேர்தல் நடந்த மாநிலம் பீகார். அங்கிருந்து 2 அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். அங்கு கொரோனா தொற்று இருக்கும்போதே அவர்கள் தேர்தலை நடத்தி முடித்துள்ளனர்.
எனவே இங்கும் அதுபோன்ற கொரோனா பரவல் இருக்கும் சூழ்நிலையில், அவர்களின் அனுபவத்தை கேட்பதற்காக அவர்களை அழைத்துப் பேசினோம்.
அங்குள்ள சுகாதாரத் துறை செயலாளரிடம் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் பேசினார். கொரோனா மேலாண்மை பற்றி பல்வேறு அனுபவங்களை அவர்கள் பரிமாறினார்கள். சுகாதாரத் துறையுடன் தேர்தல் ஆணையம் மிகவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
பீகாரில் தேர்தல் நடந்தபோது அங்கு நாளொன்றுக்கு தொற்று விகிதம் 12 ஆயிரமாக இருந்தது. ஆனால் நமக்கு 800-க்கும் சற்று அதிகமாகவே உள்ளது. இதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story