மனைவி தேர்தலில் போட்டி: நெல்லை கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் அதிரடி இடமாற்றம்


மனைவி தேர்தலில் போட்டி: நெல்லை கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் அதிரடி இடமாற்றம்
x
தினத்தந்தி 19 March 2021 3:53 AM IST (Updated: 19 March 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

மனைவி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததால் நெல்லை மாநகர போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

நெல்லை, 

நெல்லை மாநகர போலீஸ் குற்ற ஆவண காப்பகத்தில் கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் வெள்ளத்துரை. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு ஆகும். இவர் சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்த சிறப்பு தனிப்படையில் பணியாற்றி பாராட்டு பெற்றவர். மேலும் இதற்காக இரட்டை பதவி உயர்வும் வெள்ளத்துரைக்கு வழங்கப்பட்டது.

வெள்ளத்துரை மனைவி ராணி ரஞ்சிதம். இவர் வருகிற சட்டசபை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அம்பை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு தகவல்

இதுகுறித்து உடனடியாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்புவுக்கு தகவல் கிடைத்தது. அவர் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான விஷ்ணு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், “இந்த தகவல் எங்களுக்கும் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தினோம். அது உண்மை என்பது தெரியவந்தது.

அதிரடி இடமாற்றம்

இதுதொடர்பாக டி.ஜி.பி.யிடம் தகவல் தெரிவித்தோம். அவர் அறிவுறுத்தலின் பேரில் வெள்ளத்துரை சென்னை தலைமை காவல் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்” என்றார். 

Next Story