‘‘விலையில்லா வாஷிங்மெஷின் நிச்சயம் வீடு தேடி வரும்’’ தேர்தல் பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


‘‘விலையில்லா வாஷிங்மெஷின் நிச்சயம் வீடு தேடி வரும்’’ தேர்தல் பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 19 March 2021 12:02 AM GMT (Updated: 19 March 2021 12:02 AM GMT)

‘‘விலையில்லா வாஷிங்மெஷின் நிச்சயம் மக்களின் வீடு தேடி வரும். சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்’’, என்று தேர்தல் பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை, 

திருவொற்றியூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன் மற்றும் மாதவரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி ஆகியோரை ஆதரித்து, சென்னை திருவொற்றியூர் தேரடி சன்னதி தெரு சந்திப்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா கண்ட கனவு

தமிழக அரசு சார்பில் ஏழை மக்களுக்கு விலையில்லா அரிசி, வேட்டி-சேலை வழங்கி வருவதுடன் வீடில்லா ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா கண்ட கனவு படி நிச்சயம் 2023-ம் ஆண்டுக்குள் வீடில்லா ஏழை மக்களுக்கு உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, மகப்பேறு நிதி உதவி என எண்ணற்ற நலத்திட்டங்களை பெண்களுக்காக ஜெயலலிதா வழங்கி இருக்கிறார். இல்லத்தரசிகள் வீடுகளில் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்டவற்றை வழங்கினார். 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமைதிப்பூங்கா

எத்தனையோ கட்சிகள் தமிழகத்தை ஆண்டு உள்ளது. ஆனால் யார் ஆட்சியில் நல்லது நடந்தது? நிம்மதி இருந்தது? சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்பட்டது? தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது? என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்து தான் ஆண்ட கட்சி மீண்டும் ஆளும் உரிமையை அ.தி.மு.க.வுக்கு மக்கள் வழங்கினார்கள். தமிழகத்திற்கு தி.மு.க. என்ன செய்தது? மின்வெட்டால் சீரழிந்துபோன தமிழகத்தை மீட்டு மின்மிகை மாநிலமாக ஆக்கியது அ.தி.மு.க. அரசு.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு, குடும்ப சண்டையில் பொதுச்சொத்துக்கு தீ வைப்பது என தி.மு.க. ஆட்சியில் நடந்த அராஜகங்கள் ஏராளம். இதை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். மத்தியில் காங்கிரஸ் அரசுடன் தி.மு.க. இணக்கமாக இருந்தபோது தமிழகத்துக்கு என உருப்படியான திட்டங்கள் ஏதாவது வந்ததா? ஆனால் தற்போது மற்ற மாநிலங்களை காட்டிலும் நிதி என்றாலும் சரி, திட்டங்கள் என்றாலும் சரி தமிழகம் நிறைய சலுகைகளை பெற்று வருகிறது.

சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. எங்களை பொறுத்தவரை சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். எனவே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500, வருடம் 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர்கள், குறிப்பாக விலையில்லா வாஷிங்மெஷின்கள் இவை அனைத்தும் வீடு தேடி வரும். இந்த விலையில்லா வாஷிங்மெஷின் வருவதால் இனி இல்லத்தரசிகளுக்கு துணிகளை அடித்துத் துவைத்து அலுத்துப்போக தேவை இருக்காது.

எனவே யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது? என எல்லா வகையிலும் சிந்தித்துப் பார்த்து நல்ல தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்தடுத்த தேர்தல் பிரசாரங்கள்

அதனைத் தொடர்ந்து பொன்னேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் சிறுணியம் பலராமன் (பொன்னேரி), பா.ம.க. வேட்பாளர் எம்.பிரகாஷ் (கும்மிடிப்பூண்டி), திருவள்ளூரில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பி.வி.ரமணா (திருவள்ளூர்), திருத்தணி கோ.அரி (திருத்தணி), அம்பத்தூரில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமைச்சர் க.பாண்டியராஜன் (ஆவடி), வி.அலெக்சாண்டர் (அம்பத்தூர்), போரூரில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் பா.பெஞ்சமின் (மதுரவாயல்), பா.ம.க. வேட்பாளர் எஸ்.எக்ஸ்.ராஜமன்னார் ஆகியோரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

Next Story