துயர் துடைக்கும் அரசாக அ.தி.மு.க. இருக்கிறது தி.மு.க ஆட்சியில் ஏழை மக்களுக்கு, 100 ரூபாய் கூட கொடுத்ததில்லை எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்களுக்கு ரூ.100 கூட கொடுத்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
நாகப்பட்டினம்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-
நிவாரணம்
மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படுகின்ற அந்த உப்பளத் தொழிலாளர்களுக்கும் மழைக்காலங்களில் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தற்போது 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதை அ.தி. மு.க. அரசு ஆட்சி அமைந்தவுடன் 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வரப்படும்.
நீட் தேர்வு
அ.தி.மு.க. நீட் தேர்வை தடை செய்ய முயற்சிக்கவில்லை என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். நான் தொடர்ந்து இதற்கு பதில் சொல்லி வருகிறேன். சட்டமன்றத்தில் விரிவான பதிலை எங்களுடைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் புள்ளி விவரத்தோடு சொன்னார். ஸ்டாலின் அவர்களே மீண்டும் மீண்டும் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமே தி.மு.க.-காங்கிரஸ் தான். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அ.தி.மு.க. தொடர்ந்து பாடுபடும்.
அதுவரை நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தது. இதற்காக எதிர்கட்சிகளும் கோரிக்கை வைக்கவில்லை, பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. இந்த ஆண்டு 435 அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் ஆகக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கி தந்திருக்கின்றோம். எப்போது எல்லாம் ஏழை-எளிய மக்கள் துன்பப்படுகிறார்களோ, அந்த வேதனையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமாக அ.தி.மு.க. அரசாங்கம் திகழ்கிறது.
100 ரூபாய் கொடுத்தார்களா?
கடந்த ஆண்டு தை பொங்கலுக்கு ரூ.1,000 வழங்கினோம். கொரோனா காலக்கட்டத்தில் 4 மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கொடுத்தோம். குடும்பத்திற்கு 1,000 ரூபாய் கொடுத்தோம். இந்தாண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். கடந்த ஆண்டு தை பொங்கல் முதல் இந்த ஆண்டு தை பொங்கல் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4,500 ரூபாய் வழங்கிய ஒரே அரசு இது தான். தி.மு.க ஆட்சியில் ஒரு 100 ரூபாய் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்களா?
எப்போது எல்லாம் ஏழை-எளிய மக்கள் துன்பப்படுகிறார்களோ, அந்த வேதனையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமாக அ.தி.மு.க. அரசாங்கம் திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நாகப்பட்டினத்தில் பிரசாரம்
இதேபோல் நாகப்பட்டினத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து பேசியபோது, ‘இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சாதி, மத சண்டைகள் இல்லாமல் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அவர்கள் தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பதை போலவும், அ.தி.மு.க. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்காதது போல ஒரு தோற்றத்தை வெளிப்படுத்தி தேர்தல் நேரத்தில் அவர்களின் வாக்குகளை பெற நினைக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story