தொகுதி கண்ணோட்டம் ஒரத்தநாடு
தஞ்சை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு 10 தொகுதிகள் இருந்தன. இதில் 2011-ம் ஆண்டு தேர்தலில் திருவோணம், வலங்கைமான் ஆகிய 2 தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக வேறு தொகுதிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஒரத்தநாடு தொகுதி, மிக முக்கியமான தொகுதியாகும். முன்னாள் அமைச்சர்கள் வெள்ளூர் வீராசாமி, அழகு திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ. எல்.கணேசன் ஆகியோரும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம், இந்த தொகுதிக்கு உட்பட்ட தெலுங்கன்குடிகாட்டை சேர்ந்தவர். இவர் 3 முறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது 5-வது முறையாக அ.தி.மு.க. சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் களம் காண்கிறார்.
தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராமச்சந்திரன். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது இதே தொகுதியில் 2-வது முறையாக தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். அ.ம.மு.க. சார்பில் மா.சேகர் போட்டியிடுகிறார். இந்த தொகுதி 1967-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. தொகுதி சீரமைப்புக்கு பின்னர் தமிழக சட்டமன்ற தொகுதிகளின் வரிசையில் 175-வது தொகுதியாக ஒரத்தநாடு இடம் பிடித்துள்ளது. ஒரத்தநாடு ஒன்றியத்தின் 58 ஊராட்சிகள், தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியின் 19 ஊராட்சிகள், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தின் கலிராயன்விடுதி ஊராட்சி மற்றும் ஒரத்தநாடு பேரூராட்சியை உள்ளடக்கிய தொகுதி. ஒரத்தநாடு தொகுதியில் ஏற்கனவே இருந்த நீடாமங்கலம் ஒன்றியம், தொகுதி சீரமைப்பில் மன்னார்குடி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் அரசு கல்வியியல் கல்லூரி, அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அரசு மகளிர் கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்டவை ஒருங்கே அமைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டில் இந்த தொகுதிக்கு சொல்லும்படியான திட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது இப்பகுதி மக்களின் குறையாகவே உள்ளது.
ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சில வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டியது, முக்கிய சாலைகளின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டது. ஒரத்தநாடு பகுதியில் கிராமப்புறத்தில் உள்ள உயர்நிலை பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியது, திருவோணத்தில் தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து புதிய கட்டிடம் கட்டியது போன்ற பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.இந்த தொகுதியில் பெரும்பாலும் நெல், தென்னை, கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால் உற்பத்தியான நெல்லை தேக்கமின்றி கொள்முதல் செய்வதற்கான ஒரத்தநாடு ஒன்றிய அளவிலான நுகர்பொருள் வாணிபக்கழகம் அமைக்க வேண்டும். தென்னை சார்ந்த பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.
திருவோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகா உருவாக்கப்பட வேண்டும். திருவோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மகப்பேறு மருத்துவர் பணியில் இருக்கும் வகையில் மேலும் சில மருத்துவ கருவிகளை அமைத்து கொடுக்க வேண்டும். ஒரத்தநாடு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
கடந்த 1967 முதல் 2016 வரை நடந்த 12 சட்டசபை தேர்தலில் 6 முறை அ.தி.மு.க.வும், 6 முறை தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியில் கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், முக்குலத்தோர், முத்தரையர், செட்டியார் உள்ளிட்ட மற்ற சமூகத்தினர் பரவலாகவும் உள்ளனர்.
2016-ம் ஆண்டு ஒரத்தநாடு தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 904 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்து வந்தவர்கள் என 18 ஆயிரத்து 110 பேர் அதிகரித்துள்ளனர். எனவே இவர்களது வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்
ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-
1967 தி.மு.க. வெற்றி
எல்.கணேசன்(தி.மு.க) 45,232
எம்.டி.பிள்ளை(காங்) 29,139
1971 தி.மு.க. வெற்றி
எல்.கணேசன்(தி.மு.க) 49,269
தண்டாயுதபாணி(பழைய காங்) 26,283
1977 தி.மு.க. வெற்றி
டி.எம்.தைலப்பன்(தி.மு.க) 31,866
என்.சிவஞானம்(காங்) 26,156
1980 அ.தி.மு.க. வெற்றி
வெள்ளூர் தா.வீராசாமி(அ.தி.மு.க) 47,021
டி.என்.தைலப்பன்(தி.மு.க) 45,402
1984 அ.தி.மு.க. வெற்றி
வெள்ளூர் தா.வீராசாமி(அ.தி.மு.க) 46,717
எல்.கணேசன்(தி.மு.க) 42,648
1989 தி.மு.க. வெற்றி
எல்.கணேசன்(தி.மு.க) 49,554
வக்கீல் கு.சீனிவாசன்(அ.தி.மு.க.-ஜெ) 27,576
1991 அ.தி.மு.க. வெற்றி
அழகு திருநாவுக்கரசு(அ.தி.மு.க) 68,208
எல்.கணேசன்(தி.மு.க) 47,328
1996 தி.மு.க. வெற்றி
பி.ராஜமாணிக்கம்(தி.மு.க) 68,213
வி.சூரியமூர்த்தி(அ.தி.மு.க) 37,864
2001 அ.தி.மு.க. வெற்றி
வைத்திலிங்கம்(அ.தி.மு.க) 63,836
பி.ராஜமாணிக்கம்(தி.மு.க) 43,992
2006 அ.தி.மு.க. வெற்றி
வைத்திலிங்கம்(அ.தி.மு.க) 61,595
பி.ராஜமாணிக்கம்(தி.மு.க) 57,752
2011 அ.தி.மு.க. வெற்றி
வைத்திலிங்கம்(அ.தி.மு.க) 91,724
மகேஷ் கிருஷ்ணசாமி(தி.மு.க) 59,080
2016 தி.மு.க. வெற்றி
எம்.ராமச்சந்திரன்(தி.மு.க) 84,378
வைத்திலிங்கம்(அ.தி.மு.க) 80,733
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் 2,43,014
ஆண்கள் 1,18,112
பெண்கள் 1,24,892
மூன்றாவது பாலினத்தவர் 10
Related Tags :
Next Story