தொகுதி கண்ணோட்டம்: தஞ்சை

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் தஞ்சை சட்டசபை தொகுதியின் முடிவுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் என்றால் அனைத்து கட்சியினரும், முக்கிய தலைவர்களும் படையெடுக்கும் முக்கிய தொகுதியாக தஞ்சை உள்ளது. தஞ்சை தொகுதி 1952-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அப்போது தஞ்சை தொகுதி இரட்டைத்தொகுதியாக இருந்தது. அதாவது ஒரு பொது உறுப்பினரும், ஒரு ஆதிதிராவிடர் உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அடுத்த தேர்தலில் அது பொது தொகுதியாக மாற்றப்பட்டது.
1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி தஞ்சை தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அப்போது தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பரிசுத்த நாடார் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்பட்டார். இதில் கருணாநிதியை ஆதரித்து எம்.ஜி.ஆரும், பரிசுத்த நாடாரை ஆதரித்து காமராஜரும் பிரசாரம் செய்தனர். இதில் கருணாநிதி வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டசபை உறுப்பினரானார்.
மேலும் அமைச்சர்களாக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம், உபயதுல்லா ஆகியோர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள். மாநகரமும், கிராமங்களும் கலந்த தஞ்சை சட்டசபை தொகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில், சரசுவதி மகால் நூலகம், அரண்மனை, எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை உள்ளன. இதுதவிர கைவினைப்பொருட்களான தலையாட்டி பொம்மை, தஞ்சை கலைத்தட்டு, வீணை, தஞ்சை ஓவியம் போன்றவற்றின் தயாரிப்புகளும், விற்பனையும் நடந்து வருகிறது.இந்த தொகுதி தஞ்சை வட்டத்தின் ஒரு பகுதியை கொண்டது. இதில், தஞ்சை மாநகராட்சியும், வல்லம் பேரூராட்சியும் இடம் பெற்றுள்ளன. புதுப்பட்டினம், ராவுசாகிப் தோட்டம், கடகடப்பை, மேல சித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு, பிள்ளையார்பட்டி, நீலகிரி, நாஞ்சிக்கோட்டை ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது இந்த தொகுதி. கள்ளர் சமூகத்தினரை பெரும்பான்மையாக கொண்ட இந்த தொகுதியில் ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், செட்டியார், நாயக்கர், மராத்தியர், யாதவர், நாடார் உள்ளிட்ட சமூகத்தினரும் கணிசமான அளவில் உள்ளனர்.
சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸ் தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்ற இந்த தொகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி 1962-ம் ஆண்டில் வென்றார். அதன்பிறகு 1971, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தி.மு.க.வை சேர்ந்த எஸ்.நடராஜன் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றார். 1989, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த உபயதுல்லா வெற்றி பெற்றார்.
தஞ்சை சட்டசபை தொகுதி தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்ந்த நிலையில் 2011-ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது. 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் இந்த தொகுதியை தக்க வைத்தது.ஆனால், 2017-ம் ஆண்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டசபை உறுப்பினர்களில் எம்.ரெங்கசாமியும் ஒருவர் என்பதால், இத்தொகுதியில் 2019-ம் ஆண்டில் இடைத்தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலுடன் நடந்த இடைத்தேர்தலில் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.
இந்த தொகுதி இதுவரை 2 இடைத்தேர்தல்கள் உள்பட மொத்தம் 17 சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி 5 முறையும், தி.மு.க. 9 முறையும், அ.தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தஞ்சை தொகுதியில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 579 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 36 ஆயிரத்து 659 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர் 5 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 243 பேர் இருந்தனர். தற்போது 1 லட்சத்து 38 ஆயிரத்து 166 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 50 ஆயிரத்து 678 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர் 56 பேர்
என மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 900 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 22 ஆயிரத்து 657 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தான் தஞ்சை தொகுதியின் வெற்றி வேட்பாளரை நிர்ணயம் செய்யும் சக்தியாக உள்ளனர்.
இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்
தஞ்சை சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-
1952 காங்கிரஸ் வெற்றி
மாரிமுத்து(காங்.) 27,712
ராமலிங்கம்(இந்திய கம்யூ.) 24,585
சுவாமிநாத மேற்கொண்டார் (காங்.) 23,332
1957 காங்கிரஸ் வெற்றி
பரிசுத்த நாடார்(காங்.) 21,810
கோபாலகிருஷ்ணன்(சுயே.) 11,809
1962 தி.மு.க. வெற்றி
கருணாநிதி(தி.மு.க.) 32,145
பரிசுத்த நாடார்(காங்.) 30,217
1967 காங்கிரஸ் வெற்றி
பரிசுத்த நாடார்(காங்.) 33,228
நடராஜன்(தி.மு.க.) 28,717
1971 தி.மு.க. வெற்றி
நடராஜன்(தி.மு.க.) 38,288
ஆரோக்கியசாமி நாடார்(பழைய காங்.) 30,423
1977 தி.மு.க. வெற்றி
நடராஜன்(தி.மு.க.) 33,418
சாமிநாதன்(அ.தி.மு.க.) 23,662
1980 தி.மு.க. வெற்றி
நடராஜன்(தி.மு.க.) 81,691
தஞ்சை ராமமூர்த்தி
(த.நா. காமராஜர் காங்.) 39,901
1984 (இடைத்தேர்தல்) காங்கிரஸ் வெற்றி
அய்யாறு வாண்டையார்(காங்.) வெற்றி.
2-வது இடம் தங்கமுத்து நாட்டார்(தி.மு.க.)
1984 காங்கிரஸ் வெற்றி
துரை.கிருஷ்ணமூர்த்தி(இ.காங்.) 48,065
தங்கமுத்து நாட்டார்(தி.மு.க.) 46,304
1989 தி.மு.க.வெற்றி
உபயதுல்லா(தி.மு.க.) 60,380
துரை.திருஞானம்(அ.தி.மு.க.-ஜெ) 25,527
1991 அ.தி.மு.க.வெற்றி
எஸ்.டி.சோமசுந்தரம்(அ.தி.மு.க.) 64,363
உபயதுல்லா(தி.மு.க.) 44,502
1996 தி.மு.க. வெற்றி
உபயதுல்லா(தி.மு.க.) 79,471
எஸ்.டி.சோமசுந்தரம்(அ.தி.மு.க.) 34,389
2001 தி.மு.க. வெற்றி
உபயதுல்லா(தி.மு.க.) 55,782
ராஜ்மோகன்(காங்.) 46,192
2006 தி.மு.க. வெற்றி
உபயதுல்லா(தி.மு.க.) 61,658
ரெங்கசாம(அ.தி.மு.க.) 50,412
2011 அ.தி.மு.க. வெற்றி
ரெங்கசாமி(அ.தி.மு.க.) 75,415
உபயதுல்லா(தி.மு.க.) 68,086
2016 அ.தி.மு.க. வெற்றி
எம். ரெங்கசாமி(அ.தி.மு.க.) 1,01,362
அஞ்சுகம்பூபதி(தி.மு.க) 74,488
2019 தி.மு.க. வெற்றி
டி.கே.ஜி. நீலமேகம்(தி.மு.க.) 87,826
காந்தி(அ.தி.மு.க) 54,422
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் 2,88,900
ஆண்கள் 1,38,166
பெண்கள் 1,50,678
திருநங்கைகள் 56
Related Tags :
Next Story