மரபு மீறி பேசக்கூடாது ‘ஊழலுக்காக சிறை சென்ற ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான்’ எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்


மரபு மீறி பேசக்கூடாது ‘ஊழலுக்காக சிறை சென்ற ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான்’ எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 22 March 2021 5:33 AM IST (Updated: 22 March 2021 5:33 AM IST)
t-max-icont-min-icon

ஊழலுக்காக சிறை சென்ற ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் என்றும், தி.மு.க.வை பற்றி பேச முதல்- அமைச்சருக்கு அருகதை இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

சென்னை, 

சென்னை அம்பத்தூரில் தி.மு.க. வேட்பாளர்கள் எம்.கே.மோகன் (அண்ணாநகர்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), வெற்றி அழகன் (வில்லிவாக்கம்), காரம்பாக்கம் க.கணபதி (மதுரவாயல்) ஆகியோரை ஆதரித்தும், திருநின்றவூரில் தி.மு.க. வேட்பாளர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), சா.மு.நாசர் (ஆவடி), கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), சந்திரன் (திருத்தணி) ஆகியோரை ஆதரித்தும்தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் விருதுகள்

வந்தாரை வாழ வைக்கும் சென்னை. எப்போதும் தி.மு.க.வின் கோட்டை சென்னை. நாம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றியே ஆக வேண்டும்.

தமிழகம் அனைத்து துறைகளிலும் பாழ்பட்டு, 50 ஆண்டுகள் பின்தங்கி கிடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை ஆளும் முதல்-அமைச்சர் பழனிசாமி, நான் சிறப்பாக ஆட்சி செய்கிறேன். மக்களுக்காக தொண்டாற்றுகிறேன். எனக்கு பல விருதுகள் வந்து சேர்ந்து இருக்கிறது என பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார். நான் வாங்கியது போன்ற விருதுகளை தி.மு.க. வாங்கி இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு வருகிறார். தி.மு.க. வாங்கிய விருதுகளை சொன்னால் ஒரு நாள் போதாது. விருது என்றால் விருது கொடுப்பவர்கள் உயர்வான இடத்தில் இருக்க வேண்டும் அல்லது அனைவருக்கும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் அப்படி தான் நாங்கள் பல விருதுகள் வாங்கி இருக்கிறோம்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

இது இப்போது முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் ஊழல், ‘கரப்ஷன், கலெக்‌ஷன்’ தான் தெரியும். அதைத்தான் அவர் ஒழுங்காக செய்து கொண்டு இருக்கிறார். ஆக மக்களை வெறுக்கும் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொன்னால், வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடக்கும் தேர்தலில் உதயசூரியனுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

தமிழ்நாட்டில் கருணாநிதி 5 முறை ஆட்சி பொறுப்பில் இருந்து இருக்கிறார். அப்போது எல்லாம் என்னென்ன திட்டங்களை, சாதனைகளை செய்தார்? என்பது உங்களுக்கு தெரியும். அதையே பின்பற்றி, மனதில் ஏந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். எல்லா தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டு, ஆராய்ச்சி செய்து, சிந்தித்து, யோசித்து தான் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை நகருக்கு என பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும்.

தமிழகத்தை மீட்க வேண்டும்

இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலாக கருதாதீர்கள். இந்த தேர்தல் நம்முடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு நடைபெறும் தேர்தல். நாம் இழந்திருக்கிற உரிமையை மீட்கக்கூடிய தேர்தல் இது. 10 ஆண்டுகாலமாக பாழ்பட்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்துக்கு வெற்றியை தேடி தர வேண்டும். கருணாநிதி இருக்கும்போதே ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும். அந்த குறை இருக்கிறது. இருந்தாலும், ஓய்வு எடுத்து கொண்டிருக்கிற அவருடைய நினைவிடத்தில் வெற்றி மாலையை கொண்டு போய் சூட்ட வேண்டும். அதற்கு அத்தனை பேரும் உறுதி எடுக்க வேண்டும்.

மரபுமீறி பேசுவதா?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயம் காரணமாக உளறி வருகிறார். அரசியல் கட்சிகள் ஒரு கட்சியை விமர்சித்து பேசுவது தப்பு இல்லை. ஆனால் முதல்-அமைச்சர் ஊழலில் ஊறிப்போன கட்சி தி.மு.க. என்று கூறி இருக்கிறார். ஊழல் செய்து சிறை சென்ற முதல்-அமைச்சர் இந்தியாவிலேயே யார் என்று தெரியாதா? ஜெயலலிதா. அவர் உயிரோடு இல்லாததால் இப்போது சிறைக்கு போகவில்லை. இதை மறந்து பேசலாமா? தி.மு.க.வை பற்றி பேச என்ன அருகதை உங்களுக்கு இருக்கிறது?

எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலைத்துறையில் ரூ.5 ஆயிரம் கோடி டெண்டர் ஊழல் குறித்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு போட்டதே... ஆனால் வழக்கை சந்திக்காமல் சுப்ரீம் கோர்ட்டு சென்று ஏன் தடை வாங்கினீர்கள்?

234 தொகுதிகளிலும் வெற்றி

ஜனநாயக முறைப்படி எதை வேண்டுமானாலும் நீங்கள் பேசலாம். அதற்காக ஒரு வரைமுறை இல்லையா.... 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. செய்த ஊழலை நாங்கள் ஆதாரங்களுடன் சொல்கிறோம். என்ன செய்தோம்? என்று ஆதாரங்களுடன் நீங்கள் சொல்லுங்கள். நாங்கள் கேட்கிறோம். 200 தொகுதிகளில் வெற்றி என்று தான் முதலில் சொன்னேன். இப்போது சொல்கிறேன் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறப்போகிறது என்று அடித்து சொல்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

உத்திரமேரூர்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரம், உத்திரமேரூரில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

முதல்-அமைச்சர் பழனிசாமி - தரகர்கள், புரோக்கர்கள் என்று போராடும் விவசாயிகளை சொல்லி இருக்கிறார். விவசாயி என்று தன்னை கூறிக்கொள்ளும் அவர் தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால் டெல்லிக்கு சென்று அங்கு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை சந்தித்துப் பேச நீங்கள் தயாரா?. ஏறி வந்த ஏணியான சசிகலாவை எட்டி உதைக்கும் ஒரு துரோகியாக இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இன்னொன்றையும் அவர் பேசியிருக்கிறார். மத்திய அரசோடு இணக்கமாக இருந்து பல திட்டங்களை, காரியங்களை நாங்கள் இந்த ஆட்சியில் சாதித்து இருக்கிறோம் என்று ஒரு அபாண்டமான பொய்யை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார்.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் துரோகம்

மக்கள் நிம்மதி இழந்து பல கொடுமைகளுக்கு தொடர்ந்து ஆளாகி கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழுக்கும், தமிழனுக்கும், துரோகம் செய்துவிட்டு இன்றைக்கு பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் ஜோடி சேர்ந்து கொண்டு வாக்கு கேட்க வருகிறார்கள். அவ்வாறு வாக்கு கேட்டு வருபவர்களை நீங்கள் சும்மா விடுவீர்களா?. ஒன்றை மட்டும் மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். பா.ஜ.க. மட்டுமல்ல, ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது.

நான் தொடர்ந்து 200 என்று சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதை மனதில் வைத்து சொல்கிறேன், 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். ஒரு இடத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும், வெற்றி பெறுபவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அல்ல, அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தான். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு உதாரணம், நாடாளுமன்றத்தேர்தலில் தேனியில் ஒரே ஒரு அ.தி.மு.க. எம்.பி. தான் வெற்றி பெற்றார். அவர் ஓ.பி.எஸ். மகன். அவர் அ.தி.மு.க. எம்.பி.யாக அல்ல, பா.ஜ.க. எம்.பி.யாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

அதனால் எந்த காரணத்தை கொண்டும், எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வையும் வரவிடக்கூடாது. அதேபோல அ.தி.மு.க.வும் வந்துவிடக்கூடாது. அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான தேர்தல் இந்த தேர்தல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story