ராயபுரத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் 8 பேரை ஆதரித்து பிரசாரம் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் தாக்கு
தமிழகத்தின் உரிமையை டெல்லியில் அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று மு.க.ஸ்டாலின் தாக்கி பேசினார்.
சென்னை,
தி.மு.க. வேட்பாளர்கள் ஐட்ரீம் மூர்த்தி (ராயபுரம்), பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), கே.பி.சங்கர் (திருவொற்றியூர்), சுதர்சனம் (மாதவரம்), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), ஜே.ஜே.எபிநேசர் (ஆர்.கே.நகர்), எழும்பூர் (பரந்தாமன்), தாயகம் கவி (திரு.வி.க.நகர்) ஆகிய 8 பேரை ஆதரித்து சென்னை ராயபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் ‘உதயசூரியன்' சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசியதாவது:-
ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை ஓட, ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக உங்களிடத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு வந்திருக்கிறேன். அவர் படுதோல்வி அடையவேண்டும். அவருக்கு ‘டெபாசிட்' பறிபோகவேண்டும். அவர் ‘மைக்'கை பார்த்தால் மட்டுமே பேசுவார். மக்களை பார்த்தால் பேசமாட்டார். அவர் ராயபுரம் தொகுதியில் 5 முறை வென்றும், தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவருக்கு அவருக்கு சரியான பாடம் வழங்க மக்கள் தயாராக இருக்கவேண்டும்.
அடிமை ஆட்சி
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியபோது தி.மு.க. சார்பில் ஆதரவு கொடுத்தோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டும் அல்ல, கேரளா, மேற்கு வங்காளத்தில் உள்ளே நுழைய விடாத மாதிரி, தி.மு.க. ஆட்சியில் இந்த சட்டத்தை உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.
பிரதமர் நரேந்திர மோடி என்ன சொல்கிறாரோ, அதை செய்யும் அடிமை ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பற்றிய ஊழல்களை பட்டியலிட்டு கவர்னரிடம் கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று தெரியும். ஆனால் மரபுக்காக கொடுத்தோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கப்படும்.
என்னுடைய உழைப்பை...
எடப்பாடி பழனிசாமி பேசுவது வேடிக்கையாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது. அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுகிறார். உழைத்து, உழைத்து முன்னேற்றத்துக்கு வந்தவராம். அவர் ஊர்ந்து போய் பதவி வாங்கியதை இல்லை என்று நிரூபிக்க தயாரா? அவர் ஊர்ந்து போய் பதவி வாங்கியதை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் உழைக்காமலேயே முன்னுக்கு வந்தவர் என்று சொல்கிறார். என்னுடைய உழைப்பை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதா?
ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து உழைத்த கருணாநிதி, மு.க.ஸ்டாலினிடம் எனக்கு பிடித்தது, ‘உழைப்பு..., உழைப்பு.., உழைப்பு...’ என்று கூறியிருக்கிறார். அவர் கொடுத்த இந்த உழைப்பு பதவி ஜனாதிபதி பதவியை விட பெரிய பதவி. எடப்பாடி பழனிசாமி என்று சொன்னாலே, கரெப்ஷன், கலெக்ஷன், கமிஷன், கொடநாடு கொலை, கொள்ளை, சாத்தான்குளம் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், நீட் தேர்வால் அனிதா உள்பட மாணவர்கள் மரணம், பொள்ளாச்சி சம்பவம், ஜெயலலிதா, சசிகலாவுக்கு செய்த துரோகம் தான். இது பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சியே சாட்சி.
கரும்புள்ளி
அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் கிளை கழகமாக மாற்றிவிட்டார்கள். தமிழகத்தின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார். எனவே தமிழக வரலாற்றில் அவர் ஒரு கரும்புள்ளி. இந்த கொள்ளை கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும், சிறைக்கு அனுப்பவேண்டும். அதற்கான தேதி தான் ஏப்ரல் 6. தமிழ் மண்ணில் இந்தியை திணித்து, நீட்டை கொண்டு வந்து நுழைத்து மதவெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு நான் உறுதியோடு சொல்ல விரும்புவது. அது நடக்கவே நடக்காது. இது திராவிட மண். பெரியார், அண்ணா, கருணாநிதி வாழ்ந்த மண். இங்கே மோடி மஸ்தான் வேலை எல்லாம் பலிக்காது.
இங்கே நிற்பவர்கள் மட்டும் வேட்பாளர்கள் இல்லை. நானும்தான் வேட்பாளர். முதல்-அமைச்சர் வேட்பாளர். மக்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால்தான் நான் முதல்-அமைச்சராக வர முடியும். எனவே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மயங்கி விழுந்த வேட்பாளர்
மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின்போது ராயபுரம் வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி மேடையில் மயங்கி விழுந்துவிட்டார். உடனே டாக்டரான வடசென்னை தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அவர் இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுத்தார்.
தூத்துக்குடி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் நேற்று பிரசாரம் செய்தார். தூத்துக்குடி-கீதாஜீவன், திருச்செந்தூர்-அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம்-சண்முகைய்யா, விளாத்திகுளம்-மார்க்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம்-காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜ், கோவில்பட்டி-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை கொலை செய்த கூட்டத்திற்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
Related Tags :
Next Story