தொகுதி கண்ணோட்டம்: பெரம்பலூர்
இந்தியாவிலேயே 4 ஒன்றியங்களை கொண்டுள்ள மிகச்சிறிய மாவட்டமாக திகழ்கிறது பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் (பொது) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியில் பெரம்பலூர் தாலுகா மற்றும் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் உள்ள வருவாய் கிராமங்கள் மட்டும் இருந்தன.தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை செய்த போது ஆலத்தூர் தாலுகாவின் ஒரு பகுதிகளான சிறுவயலூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மாபாளையம், கண்ணப்பாடி, தேனூர், மாவலிங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், இரூர், பாடாலூர் தெற்கு, பாடாலூர் ஆகிய 14 வருவாய் கிராமங்களும் இணைக்கப்பட்டன.
தற்போது பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய 3 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 29 கிராம ஊராட்சிகளும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 12 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 61 கிராம ஊராட்சிகளும் அடங்கும்.பெரம்பலூர் சட்ட மன்ற (தனி) தொகுதியில் ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இதுதவிர உடையார், ரெட்டியார், முத்தரையர், நாயுடு, ஊராளி, கொங்கு கவுண்டர்கள், பிள்ளைமார், தேவேந்திரகுல வேளாளர், செங்குந்தர்,
வன்னியர், செட்டியார், போயர் சமுதாயத்தினர், மருத்துவர் வன்னார் சமூகம் மற்றும் முற்பட்ட வகுப்பினர், சிறுபான்மை இன மக்கள் என பரவலாக வசிக்கின்றனர்.
மாவட்ட தலைநகரான பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி கல்வி வளர்ச்சியில் தலைசிறந்த இடத்தைபெற்றுள்ளது. அடிப்படைக்கல்வி முதல் மருத்துவக்கல்வி மற்றும் உயர்கல்விபெறுவதற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகளின் கல்விச்சோலையாக திகழ்கிறது. சிறியவெங்காயம் விளைச்சலில் பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே முதன்மையாக திகழ்கிறது. மக்காச்சோளம் மற்றும் பருத்தியும் அதிகம் விளைவிக்கப் படுகிறது. சுதந்திர இந்தியாவிற்கு பிறகு பல ஆண்டுகளாக பின்தங்கி இருந்த பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி கடந்த 10 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
பெரம்பலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம், 3 ஆயிரம் ஏக்கரில் சிறப்பு பொருளாதார திட்டத்தை எதிர்நோக்கி காத்து இருக்கிறார்கள். மாவட்ட தலைநகரான பெரம்பலூர் தொகுதியின் வழியாக திருச்சி-சென்னை 4 வழிச்சாலை செல்கிறது. இந்த தொகுதியில் ரெயில்பாதை இதுவரை அமைக்கப்படவில்லை. ரெயில் விடவேண்டும் என்பது பெரம்பலூர் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ. இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் பிரபாகரன் களம் காண்கிறார். அ.ம.மு.க. கூட்டணியில் இத்தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் சார்பில் ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஸ்வரி முருகேசன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சசிகலா, புதிய தமிழகம் கட்சி சார்பில் ராதிகாவும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் ேபாட்டியிடுகின்றனர்.
தற்போதைய எம்.எல்.ஏ.தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.) எம்.எல்.ஏ.கூறியதாவது:-
பெரம்பலூர்-கூகையூர் இருவழிச்சாலை ரூ.28 கோடி திட்டம், பெரம்பலூர்-துறையூர் இருவழிச்சாலை திட்ட பணிகள் உள்பட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 90 சதவீதம் சாலைப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரம்பலூரில் ஸ்கேட்டிங் மைதானம், அரசு மகளிர் விளையாட்டு விடுதி ஆகியவை கட்டப்பட்டுள்ளது. மலையாளப்பட்டி அருகே சின்னமுட்டுலு பச்சைமலைப்பகுதியில் அணைக்கட்டு திட்ட ஆய்வு பணிக்காக ரூ.10 லட்சத்தை முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இவை தவிர கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் முத்தாய்ப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாடாலூர் ஜவுளிபூங்கா திட்டம், பெரம்பலூர் நகருக்கு திருமழப்பாடியில் இருந்து காவிரி குடிநீர் திட்டம் ஆகியவை மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றிவாய்ப்பை இழந்தவர்
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 2016 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.சிவகாமி கூறியதாவது:-
பாடாலூரில் ஜவுளிப்பூங்கா, மலையாளப்பட்டி அணை திட்டம், பெரிய வெங்காயம் பதப்படுத்தும் கிடங்குகளை 2 அல்லது 3 இடங்களில் அமைத்து ஏற்றுமதி செய்யும் திட்டம் போன்ற எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. என்னை பெரம்பலூர் மக்கள் தேர்ந்தெடுத்திருந்தால், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற் கும், தொழிலாளர்கள் உரிமைகளை
நிலைநாட்டுவதற்கும் வாய்ப்பாக இருந்திருக்கும். கிராமப்புறங்களில் விளையாட்டு மையங்களையும், கிராமப்புற மகளிர் மேம்பாடுஅடைந்திடவும், அவர்களுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்கி இருந்திருப்பேன். மேலும் வறட்சி பூமியான பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மரபு பயிர்களை பாதுகாத்திடவும், வரகு, சாமை, கம்பு, திணை ஆகிய சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்து, நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகிடவும் இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்
1962 - தி.மு.க.வெற்றி
அழகமுத்து (தி.மு.க.) 38,686
ராமரெட்டியார் (காங்) 31,168
1967 - தி.மு.க.வெற்றி
ஜே.எஸ். ராஜு (தி.மு.க.) 33,659
அய்யாக்கண்ணு (காங்.) 28,864
1971 - தி.மு.க.வெற்றி
ஜே.எஸ். ராஜு (தி.மு.க.) 39,043
பெரியண்ணன் (காங்.) 23,335
1977 - அ.தி.மு.க. வெற்றி
ராமசாமி (அ.தி.மு.க.) 37,400
வேலுசாமி (தி.மு.க.) 16,459
1980 - தி.மு.க.வெற்றி
ஜே.எஸ்.ராஜு (தி.மு.க.) 28,680
அங்கமுத்து (அ.தி.மு.க.) 24,224
1984 - காங்கிரஸ் வெற்றி
டாக்டர் நல்லமுத்து (காங்.) 57,021
சரோஜினிதங்கராசு (தி.மு.க.) 27,751
1989 - கம்யூனிஸ்டு வெற்றி
பிச்சைமுத்து (கம்யூ.) 34,829
டாக்டர்தேவராஜன் (தி.மு.க.) 34,398
1991 - அ.தி.மு.க. வெற்றி
பூவை.செழியன் (அ.தி.மு.க.) 76,202
டாக்டர்தேவராஜன் (தி.மு.க.) 25,868
1996 - தி.மு.க.வெற்றி
டாக்டர் தேவராஜன் (தி.மு.க.) 64,918
முருகேசன் (அ.தி.மு.க.) 41,517
2001 - அ.தி.மு.க. வெற்றி
ப.ராஜரத்தினம் (அ.தி.மு.க.) 67,074
டாக்டர் வல்லபன் (தி.மு.க.) 47,070
2006 - தி.மு.க. வெற்றி
எம்.ராஜ்குமார் (தி.மு.க.) 60,478
டாக்டர் சுந்தரம் (அ.தி.மு.க.) 53,840
2011 - அ.தி.மு.க.வெற்றி
இளம்பை.தமிழ்ச்செல்வன்
(அ.தி.மு.க.) 98,497
எம்.பிரபாகரன் (தி.மு.க.) 79,418
2016 - அ.தி.மு.க.வெற்றி
இளம்பை.தமிழ்ச்செல்வன்
(அ.தி.மு.க.) 1,01,073
ப.சிவகாமி (தி.மு.க.கூட்டணி) 94,220
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் -3,02,291
ஆண்கள் -1,47,320
பெண்கள் -1,54,950
மூன்றாம் பாலினம் - 21
Related Tags :
Next Story