நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததால் ஆண்டுக்கு ரூ.300 கோடி இழப்பு கமல்ஹாசன் பேச்சு


நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததால் ஆண்டுக்கு ரூ.300 கோடி இழப்பு கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 24 March 2021 5:19 AM IST (Updated: 24 March 2021 5:19 AM IST)
t-max-icont-min-icon

நடிப்பு தொழிலை விட்டு விட்டு அரசியலுக்கு வந்ததால் தனக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், கமல்ஹாசன் கூறினார்.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று வாக்கு சேகரித்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

மாறி, மாறி ஊழல் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். அடுத்த தலைமுறையினராவது நன்றாக இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு பகுதியிலும் ஒருசில சிறிய குறைகள் இருக்கலாம். ஆனால் தமிழகம் முழுவதுமே வெறும் குறைகளாக இருக்கின்ற அளவிற்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் கோடி ஊழல் செய்ததாக ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின், ரூ.20 லட்சம் கோடி ஊழல் செய்ததாக பழனிசாமி கூறுகிறார். இருவரும் மாறி, மாறி குறை சொல்லிகொண்டு இருக்கிறார்களே தவிர தவறு செய்யவில்லை என்று யாரும் கூறவில்லை. இதனால் ரூ.30 லட்சம் கோடி, மக்கள் வரிப்பணம்தான் காணாமல் போய் உள்ளது.

ஆண்டுக்கு ரூ.300 கோடி இழப்பு

ஊழல் செய்தவர்கள் உள்ளே போனாலும் சிறையில் இருந்து ஷாப்பிங் போகிற அளவிற்கு நமது சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன. தலைமையில் இருந்து நேர்மையாக இருந்தால்தான் மக்களுக்கு நல்லது நடக்கும். கமலுக்கு இவ்வளவு கோடி சொத்துகளா? என்று கேட்கிறார்கள். ஆம்... நீங்கள் கொடுத்ததுதான். நடிகராக இருந்தபோது மக்கள் அளித்த சம்பளம். ஆண்டுதோறும் எனக்கு சம்பள உயர்வு கிடைத்தது.

நான் அரசியலுக்கு வந்ததால் ஆண்டிற்கு ரூ.300 கோடி இழப்புதான். ஆனால் அதனை நான் பொருட்படுத்தவில்லை. மக்கள் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்துதான் அரசியலுக்கு வந்தேன்.

காசுக்கு ஆசை இல்லை

நான் காசுக்கு ஆசைப்பட மாட்டேன். காந்தியை போன்று எளிமையாக வாழவேண்டும் என்று நினைக்கக்கூடியவன். மக்களுக்கு சேவை செய்வதற்காக கோவணம் கட்டிக்கொண்டு வருவேன்.

மக்களுக்கு இலவசங்களை அறிவித்து கொடுப்பது ஏமாற்று வேலை. மக்களிடம் கொடுங்கோல் வரி போட்டும், டாஸ்மாக் கடை மூலம் வரும் பணத்தை கொண்டும்தான் இலவசங்கள் வழங்குகின்றனர்.

மக்களால் தகர்க்க முடியாத கோட்டை என்று எதுவுமில்லை. ஜனநாயகம் கோட்டையல்ல. மக்கள் வாழும் இடம். மக்கள் விழிப்புணர்வுடன் கேள்வி கேட்டால் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story