கட்சியையும், ஆட்சியையும் நல்ல முறையில் நடத்த பா.ஜ.க. உறுதுணையாக இருக்கிறது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
தான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அ.திமு.க.வையும், ஆட்சியும் நல்ல முறையில் நடத்துவதற்கு பா.ஜ.க. உறுதுணையாக இருந்து வருகிறது என்றும், பிரதமருக்கு இருக்கும் பணிச்சுமையிலும், தனக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கரூர்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, கரூர் தொகுதியில் நேற்று வாக்கு சேகரித்து பேசியதாவது:-
இணக்கமான ஆட்சி
அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. இன்றைக்கு இந்திய நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும். இந்திய நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சிறப்பான நிர்வாக திறமையுடன் நாட்டை ஆளக்கூடியவர் பிரதமர். இந்த கூட்டணி வெற்றி பெறுவதன் மூலமாக நாட்டு மக்கள் வளம் பெறுவதுடன், திட்டங்கள் கிடைக்கப்பெறும்.
மத்தியிலும், மாநிலத்திலும் இணைந்து செயல்பட்டு, அனைத்து திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி நிச்சயம் வேண்டும். தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால், மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமாக இருக்க வேண்டும். அதனால்தான் அ.தி.முக. கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பான ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
பா.ஜ.க. உறுதுணையாக இருக்கிறது
மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க., பா.ஜ.க..விடம் அடிமையாக இருந்து வருகிறது என கூறிவருகிறார். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த இயக்கமும், ஆட்சியும் நல்ல முறையில் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது பாரதீய ஜனதா. நான் முதல்-அமைச்சரான பிறகு பல முறை பிரதமரை சந்தித்துள்ளேன். அப்பொழுது நானும் உங்களைப் போல், சாதாரண, எளிமையான குடும்பத்தில் இருந்து முதல்-அமைச்சராக வந்தேன். குஜராத்தில் உள்ள கிராம மக்கள் உயர்வதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினேன். அதே போல் நீங்களும் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் உயர திட்டங்களை அறிவித்து செயல்படுத்துங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.
இது சாதாரண விஷயம் அல்ல. பிரதமருக்கு இருக்கும் பணிச்சுமையிலும், என்னைப்போல புதிதாக முதல்-அமைச்சர் ஆனவருக்கு, என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டினார். நமது மாநிலம் ஏற்றம் பெற நல்ல பல ஆலோசனைகளை வழங்கியவர் பிரதமர்.
உதவி செய்கிறது
அமித்ஷா நாம் கேட்ட பொதெல்லாம் நமக்கான உதவிகளை செய்து கொடுத்துள்ளார். நல்ல இணக்கமான ஒரு சூழ்நிலை மத்திய அரசுடன் இருந்தால் தான் நம் மாநிலம் வளம் பெறும். தேசிய நெடுஞ்சாலைகளுக்காக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வாரி வழங்கியுள்ளனர். தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, மத்திய தரைவழிப்போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்தார். இவ்வளவு நிதி தமிழகத்திற்கு ஒதுக்கினாரா? இல்லை.
அதேபோல நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு மத்திய அரசு பல்வேறு வகையில் உதவி செய்து வருகின்றது. கோதாவரி - காவிரி இணைப்புத்திட்டம் நிறைவேற்றுவதின் மூலம் நமது விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கப் பெறுவதுடன், குடிநீர் தேவையும் நிறைவேறும்.
அமைதிப்பூங்கா
கடந்த 10 ஆண்டுகளில் இந்த தொல்லைகளெல்லாம் இல்லாமல் நிம்மதியாக தொழில் நடத்துகின்றீர்கள், நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். மதச் சண்டை, சாதிச் சண்டை கிடையாது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான். அதனால்தான் ஜி.டி.பி. உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு தொழில் துறையில் சிறந்து விளங்குவதற்கு காரணம், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதும், தடையில்லா மின்சாரமும் தான்.
இது உங்கள் அரசு, மக்களின் அரசு. ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு வரும் அ.தி.மு.க. அரசு மீண்டும் தொடர, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து பெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story