அரசியல் உள்நோக்கத்தோடு வருமான வரித்துறை சோதனை - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
அரசியல் உள்நோக்கத்தோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.
சென்னை
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இதனிடையே தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்தவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கொடுப்பதை தடுக்கவும் தேர்தல் பறக்கும் படையினர் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளை மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவின் சொந்த கிராமமான சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிரானைட் பேக்டரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எ.வ.வேலுவின் அலுவலகம், அவர் அமைத்த தேர்தல் பணிமனைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீநாத் நகரில் உள்ள எ.வ.வேலுவின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திமுகவை தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் இதுபோன்று வருமான வரித்துறை சோதனையை நடத்துகிறார்கள். திருவண்ணாமலையில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் எதுவும் சிக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.
வருமான வரித்துறை சோதனை நடத்தினால் பயந்துபோய்விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கிறது. இந்த வருமான வரித்துறை சோதனைகளால் திமுகவினர் துவண்டுவிட மாட்டார்கள் என்றும் துரைமுருகன் கூறினார்.
Related Tags :
Next Story