அ.தி.மு.க.வின் ‘டாடி’ மோடி மக்களை சுரண்டும் ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் பல்லாவரம் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு
அ.தி.மு.க.வின் ‘டாடி’ மோடி. மக்களை சுரண்டும் அ.தி.மு.க. ஆட்சியை விரட்டியக்க வேண்டும் என்று சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
சென்னை,
தி.மு.க. வேட்பாளர்கள் த.மோ.அன்பரசன் (ஆலந்தூர்), இ.கருணாநிதி (பல்லாவரம்) ஆகியோரை ஆதரித்து சென்னை பல்லாவரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வேனில் நின்றபடி ‘உதயசூரியன்’ சின்னத்துக்கு வாக்குகள் திரட்டி அவர் பேசியதாவது:-
தேர்தலுக்காக வந்து போகிறவன் இந்த ஸ்டாலின் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். எப்போதும் எந்த சூழலிலும் உங்களுடன் இருப்பவன் என்ற உரிமையோடு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டு பிள்ளையாக வந்திருக்கிறேன்.
ஏழைகள் இல்லாத நாடாக தமிழ்நாட்டை மாற்ற போகிறேன் என்று கடந்த 2 நாட்களாக பழனிசாமி சொல்லி வருகிறார். 4 ஆண்டு காலமாக முதல்-அமைச்சராக இருந்து என்ன செய்து கிழித்தீர்கள்?. அவர் தனது உறவினர், சம்பந்திகளுக்கு டெண்டர் கொடுத்து இருக்கிறார். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்து இருக்கிறார். இது தான் அவர் செய்தது.
உலகமகா நடிப்பு
10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. ஏழைகளுக்காக ஒன்றும் செய்யவில்லை. மத்திய பா.ஜ.க. அரசும் எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க. ‘டாடி’ யார் என்றால், மோடி.
தன்னை ஏழைத்தாயின் மகன் என்று மோடி சொன்னார். ஆனால் ரூ.10 லட்சம் மதிப்பிலான ‘கோட்-சூட்' அணிந்து வெளிநாடுகளை சுற்றி வந்தார். பெட்ரோல்-டீசல், சிலிண்டர் விலையை ஏற்றியதுதான் அவர் ஏழைகளுக்கு செய்த காரியம்.
மோடியும், பழனிசாமியும் ஏழைகள் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று சொல்கிறார்கள். இது உலக மகா நடிப்புடா சாமி என்பது போல பொய்யை சொல்கிறார்கள்.
மக்களை சுரண்டும் ஆட்சி
தமிழ்நாடு என்று சொன்னாலே தொழில் நிறுவனங்கள் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடுகிறார்கள். கமிஷன் கேட்பதால் ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஓடி போகும் நிலைமைதான் இருக்கிறது.
கருணாநிதி ஆட்சியில் நான் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது, தொழிற்துறை என் கையில் இருந்தது. சென்னை- காஞ்சீபுரம், சென்னை-ஸ்ரீபெரும்புதூர், சென்னை-சோழிங்கநல்லூரில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி மீது தொழில் முனைவோர்களுக்கு துளி அளவுக்கு கூட நம்பிக்கை இல்லை. மக்களை ஏய்க்க கூடிய, சுரண்ட கூடிய அ.தி.மு.க. ஆட்சியை நீங்கள் ஓட, ஓட விரட்ட தயாராக இருக்கவேண்டும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை காப்பி
தி.மு.க. தேர்தல் அறிக்கையை காப்பியடித்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. மக்களிடம் எதையாவது சொல்லி ஏமாற்றிவிடலாம் என்று நிணைகிறார்கள். 2011, 2016 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. சொன்னதையெல்லாம் செய்யாத ஆட்சி தான் நடக்கிறது. கொரோனா வந்தபோது எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நான்தான் முதன் முதலில் குரல் கொடுத்தேன். ‘ஒன்றிணைவோம் வா’ என்ற அருமையான திட்டத்தை உருவாக்கினோம்.
உயிரை பணயம் வைத்து பணியாற்றிய ஒரே கட்சி தி.மு.க. என்பதை நாடு மறந்திட முடியாது. உணவு கொடுத்தோம். மளிகை பொருட்கள் கொடுத்தோம். மருந்து-மாத்திரைகளை வீடு தேடி போய் கொடுத்தோம்.
முதல்-அமைச்சர் வேட்பாளர்
கருணாநிதி தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, ‘சொன்னதை செய்வோம். செய்வதை செல்வோம்’ என்று கூறுவார். அவரது வழியில் நானும் ‘சொன்னதைதான் செய்வேன். செய்வதைதான் சொல்வேன்’ என்ற உறுதியோடு உங்களிடம் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.
நான் எனக்கும் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். புரிந்து கொண்டீர்களா?. கொளத்தூர் தொகுதியில் நான் வேட்பாளராக நிற்கிறேன். அங்கு நான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவேன்.
இப்போது முதல்-அமைச்சர் வேட்பாளராக உங்களிடம் வந்திருக்கிறேன். தி.மு.க. வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற செய்தால்தான் நான் முதல்-அமைச்சராக வர முடியும். எனவே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து தி.மு.க. வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய வேண்டும்.
இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டும் அல்ல. இழந்திருக்கும் நம்முடைய உரிமை, சுயமரியாதையை மீட்டெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்தும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரால் வர முடியவில்லை. எனினும் மு.க.ஸ்டாலின் அவருக்கு ஆதரவாகவும் பேசி வாக்குகள் திரட்டினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு, கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்பாளர் கு.பிச்சாண்டி, செங்கம் தொகுதி வேட்பாளர் மு.பெ.கிரி, போளூர் தொகுதி வேட்பாளர் கே.வி.சேகரன், வந்தவாசி தொகுதி வேட்பாளர் அம்பேத்குமார், கலசபாக்கம் தொகுதி வேட்பாளர் சரவணன், ஆரணி தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், செய்யாறு தொகுதி வேட்பாளர் ஜோதி ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
தேர்தல் வரும் நேரத்தில், நாம் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று நினைக்கின்ற சிலர், ‘தி.மு.க. இந்துக்களுக்கு விரோதி’ என்று ஒரு பிரசாரத்தை தொடர்ந்து நடத்துவது உண்டு.
யாருடைய நம்பிக்கைக்கும் இடையூறாக இருப்பது தி.மு.க. அல்ல. எல்லோரையும் மதித்துத்தான் என்னுடைய ஆட்சி நடக்கும் என்ற உறுதியை சொல்ல விரும்புகிறேன்.
இந்தி திணிப்பு
மத உணர்வுகளை தூண்ட விரும்புவோர் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள், அரசியல் வேறு - ஆன்மிகம் வேறு என்று தெளிவு கொண்டவர்கள். இதை பா.ஜ.க. புரிந்துகொள்ள இன்னும் 100 ஆண்டுகள் ஆகும். அவர்கள் அறிவில்லாதவர்கள். அவர்கள் எதையும் யோசிக்க மாட்டார்கள் - சிந்திக்க மாட்டார்கள்.
இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பது, இந்தி பேசும் இளைஞர்களை தமிழ்நாட்டில் வேலைக்குள் நுழைப்பது என அதன் மூலமாக பா.ஜ.க.வை வளர்த்து விடலாம் என்று ஒரு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு இங்கே இருக்கும் எடப்பாடி பழனிசாமி கும்பல் வேண்டுமானால் வேடிக்கை பார்க்கலாம்.
வேடிக்கை பார்க்க மாட்டார்கள்
தி.மு.க.வோ, தமிழ்நாட்டு மக்களோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தனிப்பட்ட எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை. இந்திக்கு என்றைக்கும் தி.மு.க. எதிரி அல்ல. ஆனால் இந்தியை திணிக்கக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் கோரிக்கை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் தேர்தலுக்கு முன்பே சொன்னேன். இந்தத் தேர்தலை வெறும் தேர்தலாக மட்டும் கருதாதீர்கள். நம்முடைய கொள்கையைக் காப்பாற்ற, நாம் கட்டி அமைத்திருக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற நடக்கின்ற போர். அந்தப் போரில் நாம் வெற்றி கண்டாக வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story