தி.முக. ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் மதுரையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்


தி.முக. ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் மதுரையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 26 March 2021 1:07 AM GMT (Updated: 26 March 2021 1:07 AM GMT)

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் என்று மதுரையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை, 

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்று கூறாமல், என்னைப்பற்றியும், அமைச்சரை பற்றியும் விழுப்புரம் கூட்டத்தில் பேசி உள்ளார். தர்மபுரி கூட்டத்தில், நானும் ரவுடிதான் என்பது போன்று எப்போதும் தான் ஒரு விவசாயி என்று தன்னையே பெருமைப்படுத்தி சொல்லிக்கொள்கிறார் என்று என்னைப்பற்றி பேசி உள்ளார்.

வேதனையாக உள்ளது

விவசாயியை ரவுடியோடு ஒப்பிட்டு மு.க.ஸ்டாலின் பேசுவது வேதனையாக உள்ளது. விவசாயியும், ரவுடியும் ஒன்றா?. விவசாயி என்று சொன்னாலே மு.க.ஸ்டாலின் எரிந்து விழுகின்றார். நான் விவசாயம் செய்கிறேன், அதனால் விவசாயி என்று கூறுகின்றேன். இதில் என்ன தப்பு இருக்கின்றது.

இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிதான். 70 சதவீதம் பேர் இங்கு விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். விவசாயியை தீண்டத்தகாதவர்கள் போன்று நினைக்கின்றார். விவசாயியை கொச்சைப் படுத்தி பேசினால் எதிர்க்கட்சி வரிசை கூட மிஞ்சாது.

விவசாயிகளிடம் மதிப்பு உயர்ந்துள்ளது

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, ஸ்டாலின் போடும் செருப்பைவிட நான் ஒரு ரூபாய் மதிப்பு குறைந்தவன் என்று பேசி உள்ளார். ஒரு முதல்-அமைச்சரை எதற்கு இணையாக வைத்து பேசுகிறார் என்று பாருங்கள். பரவாயில்லை, நான் அப்படியே இருந்து கொள்கிறேன். விவசாயி, ஏழை அப்படித்தான் இருப்பார்.

நான் மதிப்பு குறைவுள்ளவனாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களுடைய மதிப்பு விவசாயிகளிடையே உயர்ந்து இருக்கிறது. விவசாயி என்ற சொல் எங்களை உயர்த்தி உள்ளது. 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்ததால் அப்படித்தான் பேசுவீர்கள்.

காற்றில் ஊழல்

இந்தியாவிலேயே கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்கின்ற கட்சி தி.மு.க. தான். அவர்கள் நம்மைப்பற்றி தரக்குறைவாக பேசுகிறார்கள். இதற்கெல்லாம் இந்த தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

பேச்சில் தன்மை வேண்டும், பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும். ஒருவரை சிறுமைப்படுத்தி பேசுவதினால், அவர்களின் உழைப்புக்கோ, புகழுக்கோ எந்த வித பங்கமும் ஏற்படாது. மென்மேலும் மதிப்புத்தான் கூடுமே தவிர சறுக்கல் ஏற்படாது என்பதை இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன்.

பட்டா போடுவார்கள்

தி.மு.க. மக்களுக்காக சேவை செய்கின்ற கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. தி.மு.க. குடும்ப கட்சி. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள். கொள்ளையடிப்பதில் அவர்கள் மன்னர்கள். அவ்வாறு மத்தியிலும் மாநிலத்திலும், அதிகாரத்தில் இருந்து கொள்ளையடித்த குடும்பம் தி.மு.க.-வினர் குடும்பம்.

தி.மு.க. அராஜக கட்சி. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு வந்துவிடும். அராஜகம் தலைவிரித்தாடும். முதலில் இடத்தை தான் பட்டா போட்டார்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டுவிடுவார்கள். கட்டப்பஞ்சாயத்து துளிர்விட்டு ரவுடிகள் தலைகாட்ட தொடங்கி விடுவார்கள்.

தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அப்பாவி மக்களிடம் இருந்து அபகரித்த 14 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்புப்பிரிவை உருவாக்கி மீட்டுக்கொடுத்தார்.

முன்னணி மாநிலம்

தமிழ்நாடு வேளாண்மையிலும், தொழிற்துறையிலும் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

ஒரு நாடு வளர வேண்டும் என்றால் அங்கு அமைதி இருக்க வேண்டும். அந்த அமைதியை அ.தி.மு.க. அரசால் மட்டுமே கொடுக்க முடியும். எனவே, மக்கள் அமைதியாக வாழ அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சீர்வரிசை திட்டம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர், திருமங்கலம் செக்கானூரணி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு ஏப்ரல் 1 முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஏப்ரல் 1-ந்தேதிக்குப் பிறகு எப்பொழுது போட்டாலும் பம்புசெட் ஓடும். அதேபோல், ஏழை, எளியப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது, இனிவரும் காலங்களில் திருமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை திட்டம் அதையும் செயல்படுத்த இருக்கின்றோம்.

தி.மு.க தலைவர் தனது குடும்பத்தைத்தான் காப்பாற்றினார். நமது தலைவர்கள் மக்களை காப்பாற்றினார்கள். அ.தி.மு.க. மக்களுக்கான கட்சி, மக்களின் குரலாக இருக்கின்ற கட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story