எடப்பாடி பழனிசாமி நீண்டகாலம் வாழ்ந்து தி.மு.க.வின் ஆட்சியை பார்க்க வேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு
எங்களை வீழ்த்த உயிரை விட வேண்டாம் என்றும், எடப்பாடி பழனிசாமி நீண்டகாலம் வாழ்ந்து தி.மு.க.வின் ஆட்சியை பார்க்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கேயம், கோபிசெட்டிபாளையத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
ஒருவன் பிறக்கவில்லை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் ஏதேதோ உளற ஆரம்பித்திருக்கிறார். வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறார். ஒரு கூட்டத்தில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு என்னையே பலியிடத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை அழிக்கப்போகிறோம் என்று சொல்கிறீர்களே… தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு இல்லை. தி.மு.க.வை வீழ்த்தவும் முடியாது. அதை நினைத்துப் பார்க்கவும் முடியாது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு இதுவரை ஒருவன் பிறக்கவுமில்லை. இனியும் ஒருவன் பிறக்க போவதும் இல்லை.
களத்தில் உதயசூரியன்
மத்தியிலும் நம்முடைய ஆட்சி இல்லை. மாநிலத்திலும் ஆளுங்கட்சி இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு கட்சியை வீழ்த்த இத்தனை பேர் கூடி இருக்கிறார்கள் என்றால் நம்முடைய சக்தி என்னவென்று பாருங்கள். கருணாநிதி இல்லை அதனால் கட்சியை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்துவிட்டார்கள். கருணாநிதி மறைந்துவிட்டாலும் அவரால் உருவாக்கப்பட்டிருக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அதை மறந்துவிடாதீர்கள்.
கருணாநிதி மறைந்துவிட்டாலும் எங்களைப் போன்றவர்களின் உள்ளங்களில் அவர் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை மறந்து விடாதீர்கள். இந்த களத்தில் நிற்பது கருணாநிதி தான். களத்தில் நிற்பது உதயசூரியன்தான். 234 தொகுதிகளிலும் நிற்பது இந்த ஸ்டாலின்தான். அதை மறந்துவிடாதீர்கள். இந்த பாசம், நேசம், ஒற்றுமையினால்தான் ஒரு குடும்ப உணர்வோடு நாம் இருக்கிறோம்.
நீண்டகாலம் வாழுங்கள்
எடப்பாடி பழனிசாமி அவர்களே தி.மு.க.வை வீழ்த்த உங்கள் உயிரைத்தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீண்ட காலம் வாழுங்கள். விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்று தி.மு.க. ஆளுகின்ற காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும். அதைத்தான் இந்த காங்கேயம் கூட்டத்தின் மூலமாக அவருக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
என்ன குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ.க. கட்டாயம் வரப்போவதில்லை. அவர்கள் ‘வாஷ் அவுட்’. அ.தி.மு.க., பா.ஜ.க.வு்க்கு சுத்தமாக முடிவு கட்ட வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நானும் வேட்பாளராக உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். முதல்-அமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதல்-அமைச்சர். எனவே தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும்.
ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். இந்த தேர்தல் என்பது நாங்கள் வெற்றி பெற வேண்டும் - ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் ‘நீட்’டை கொண்டு வந்து திணித்து விட்டார்கள். இந்தியை நுழைத்து கொண்டு இருக்கிறார்கள். சமஸ்கிருதத்திற்கு வாசலை திறந்து விட்டார்கள். நம்முடைய தமிழ்மொழிக்கு பெரிய ஆபத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மாநில உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நம்முடைய சுயமரியாதையை இழந்து கொண்டிருக்கிறோம்.
அப்படிப்பட்ட சுயமரியாதையை காப்பாற்றுவதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும். இது இது சுயமரியாதை மண். எனவே நம்முடைய தமிழகத்தை மீட்க, நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Related Tags :
Next Story