அண்ணாநகரில் வாக்கு சேகரிப்பு: ‘அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு


அண்ணாநகரில் வாக்கு சேகரிப்பு: ‘அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 March 2021 9:19 PM GMT (Updated: 2021-03-30T02:49:17+05:30)

அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.

சென்னை, 

சென்னை அண்ணாநகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணாநகர் எம்.கே.மோகனை ஆதரித்து அந்த தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது:-

அண்ணாநகர் தி.மு.க. வேட்பாளர் மோகன் கொரோனா காலத்தில் அனைவருக்கும் உணவு வழங்கியவர். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது தண்ணீர் வசதி ஏற்படுத்தி தந்தவர். இந்த தொகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும் என்றும், அதற்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்து உள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

சிறுபான்மை மக்கள் நலனுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தையும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதா சட்டத்தையும் ஆதரித்தார்கள். தற்போது தேர்தலுக்காக இந்த 2 சட்டங்களுக்கும் எதிராக அழுத்தம் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவிகள், முதியோர்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

எனவே தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மகளிருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டங்கள் தோறும் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

அடமானம் வைக்காத தமிழன்

நமது உரிமைகளை டெல்லியில் அடமானம் வைக்காத தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். அதை மு.க.ஸ்டாலின் தான் செய்ய முடியும். எனவே, அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு அளித்து தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் தி.மு.க. வேட்பாளர்கள் பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), ஆர்.வெற்றி அழகன் (வில்லிவாக்கம்), பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம்), எபினேசர் (ஆர்.கே.நகர்) ஆகியோரை ஆதரித்தும் கனிமொழி எம்.பி. நேற்று பிரசாரம் செய்தார். கனிமொழியுடன் அவரது தாயார் ராசாத்தி அம்மாளும் வந்திருந்தார்.

Next Story