மக்கள் நீதி மய்யம் தமிழக மக்களை செழுமை கோட்டை நோக்கி நகர்த்தும் கமல்ஹாசன் பேச்சு
மக்கள் நீதி மய்யம் தமிழக மக்களை செழுமை கோட்டை நோக்கி நகர்த்தும் என்று கமல்ஹாசன் பேசினார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் போட்டியிடும் பழ.கருப்பையாவுக்கு ஆதரவாக வடபழனி முருகன் கோவில் முன்பு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேனில் நின்றபடி பிரசாரம் செய்து பேசியதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் முன்னேற்றம் எல்லோருக்கும் தெரிகிறது. நாங்கள் செல்லும் இடம் எல்லாம் மக்களின் அன்பு எங்களுக்கு பரிசாக கிடைக்கிறது. மற்றொரு பரிசாக எதிரிகளின் பயமும் எங்களுக்கு பரிசாக கிடைக்கிறது. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு பிரதமர் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு வருவது ஆச்சரியமாக உள்ளது. ஊரை அடக்கி வைத்து கொண்டு பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. காந்தியை நினைவு கூறவேண்டும் அவர் துணிவு வேண்டும். அடக்குமுறை செய்து மக்களை வெல்ல நினைப்பது கொடுங்கோல் ஆகும்.
செழுமை கோடு
ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான பல திட்டங்கள் யோசித்து செய்யப்பட உள்ளன. எல்லா அரசியல்வாதிகளும் வழக்கமாக பேசும் வார்த்தை வறுமைக்கோட்டிற்கு மேல் தூக்கிவிடுகிறேன் என்று கூறுவார்கள். ஆனால் மக்கள் நீதி மய்யம் தமிழக மக்களை செழுமை கோட்டை நோக்கி நகர்த்தும். அவ்வாறு செய்வதன் மூலம் சறுக்கல்கள் வந்தாலும் வறுமைகோட்டிற்கு கீழ் செல்லமாட்டீர்கள். அரசியல் கட்சியினர் அவர்களுக்கு நீங்கள் ஓட்டு போடுவதற்காக எவ்வளவு பணம் கொடுக்கிறார்களோ அதை விட பல லட்சம் ரூபாய்க்கு நீங்கள் தகுதியானவர்கள். ரூ.5 ஆயிரம் கொடுப்பவர்களிடம் ரூ.10 ஆயிரம் கொடுங்கள் என்று கேட்டுப்பாருங்கள். கொடுக்க மாட்டார்கள்.
கோவையில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று விடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. அதை தவிர்க்க தான் நான் கோவையில் போட்டியிடுகிறேன். பொதுமக்களின் குரல்களை கேட்பதற்காக என் தொகுதியில் 19 அலுவலகங்களை திறந்து வைத்துள்ளேன். அதையே தியாகராயநகரிலும் பழகருப்பையாவிற்கும் பரிந்துரைக்கிறேன். என்னால் மேசையை தட்டிக்கொண்டு இருக்கமுடியாது என வந்தவர் தான் பழ கருப்பையா.
வாழ்வில் அழகை எதிர்பார்க்கிறேன்
நாங்கள் வாழ்வில் செட்டில் ஆனவர்கள். வடபழனியில் உள்ள சினிமா தொழிலாளர்கள் தான் என்னை சிறிய வயதில் தோளில் தூக்கி சுமந்தவர்கள். தமிழகம் முழுவதும் 4 வயதில் இருந்து என்னை தோளில் தூக்கி சுமந்துள்ளனர். எனக்கு ஒரு குறையும் இல்லை. நீங்களும் நன்றாக இருக்கவேண்டும் என் எஞ்சிய வாழ்வு உங்களுக்காக. காந்தியின் கொள்ளுபேரன் நான். தமிழகத்தை களையெடுப்போம். அம்பேத்கர், காந்தி, அடுக்கு மொழியில் பேச தெரியாத காமராஜர் பேச்சை கேட்டு வளர்ந்தவன். என் பேச்சியில் அழகை நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் வாழ்வில் அழகை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத்தொடர்ந்து விருகம்பாக்கம், வளசரவாக்கம் ஜங்சன், வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
Related Tags :
Next Story