மோடி கோவை வந்தார்: கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது


மோடி கோவை வந்தார்:  கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட 100 பேர் கைது
x
தினத்தந்தி 30 March 2021 5:39 AM GMT (Updated: 30 March 2021 5:39 AM GMT)

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்

கோவை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கோவை வரும் அவர் அங்கிருந்து கேரளா செல்கிறார்.

பின்னர், நண்பகல் தாராபுரம் வரும் அவர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து, பிரதமர் மோடி, இன்று மாலை புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம்  மேற்கொள்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும், புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாக விமான போக்குவரத்து மற்றும் ட்ரோன் கேமராவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலைத் திடலில் பா.ஜ.க, சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி . அங்கு அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகவரவேற்பு அளித்தனர். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழத்தினர்  கைது செய்யப்பட்டனர். அதன் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story