2017-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் - உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 March 2021 9:28 AM GMT (Updated: 30 March 2021 9:28 AM GMT)

சட்டப்பேரவை தேர்தலில் 2017-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

சென்னை, 

திமுகவின் சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், 15 வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிவது குறித்து அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும், வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவிகள் பொருத்த வேண்டும், வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை அரசியல் கட்சி நிர்வாகிகளைக் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை இணையத்தில் நேரலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அதில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, பதற்றமான வாக்குச்சாவடி மட்டும் அல்லாமல் அனைத்து வாக்குச்சாவடிகளையும் நேரலை செய்ய வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரப் பதிவுகளை மாற்ற முடியும் என வாக்காளர் மத்தியில் அச்சம் உள்ளதால் அவை பாதுகாக்கும் ஸ்ட்ராங் ரூம்களில் ஜாமர் கருவி பொருத்த வேண்டும் என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜகோபாலன் கூறுகையில், பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிய அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவற்றை வெளியிட முடியாது. அவை உள்ளிட்ட 44,000 வாக்குச்சாவடிகளின் நேரலை இணையதளத்தில் ஒளிபரப்பாகும். 15 வருடப் பழமையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.

தேர்தலுக்கு முன்பாகவே மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைபை மூலமாகத் தொடர்புகொண்டு வாக்குப்பதிவில் திருத்தம் செய்ய முடியாது என்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவி பொருத்த வேண்டிய அவசியமில்லை. மேலும், இந்த அறைகளில் மின் கசிவு மூலமாக தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மின்சாரம் துண்டித்து வைக்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்து, திமுக தொடர்ந்து வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளால் முடித்து வைக்கப்பட்டது.

Next Story