பிரதமரின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கிறது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புகழாரம்


பிரதமரின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கிறது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புகழாரம்
x
தினத்தந்தி 30 March 2021 11:08 PM GMT (Updated: 30 March 2021 11:08 PM GMT)

பிரதமரின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

தாராபுரம், 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

வெற்றிக் கூட்டணி

‘நடைபெறவிருக்கிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடுவார்கள். நம்முடைய கூட்டணி வலிமையான வெற்றிக் கூட்டணி. இந்த தேசத்துக்கு நன்மை செய்யக்கூடிய பிரதமர் இடம்பெற்றிருக்கும் கூட்டணி நம்முடையது.

பிரதமர் ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் இந்திய நாடு உயர்வடைய இரவு, பகல் பாராமல் உழைக்கின்றார். அவரது உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கிறது. உலகளவில் நாம் வல்லரசாக வேண்டும் என்ற நாட்டு மக்கள் கனவை பிரதமர் நனவாக்கியிருக்கிறார்.

பிரதமருக்கு நன்றி

தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களை கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு கொடுக்கிறது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 5 ஆயிரத்து 200 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் அமைக்க சுமார் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்மூலம், தமிழகம் உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலம் என்ற பெருமையை அடைய உதவிய பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி.

தமிழ்நாடு நீர் பற்றாக்குறை மாநிலம். அதை மாற்ற, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்த கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேறும்போது தமிழ்நாட்டு மக்கள் ஏற்றம் பெறுவார்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். அந்தத் திட்டத்தை பிரதமர் நிறைவேற்றித் தருவார். மிகப்பெரிய இத்திட்டம் தமிழகத்துக்கு வரவேண்டும் என்றால் மத்திய அரசும், மாநில அரசும் இணக்கத்தோடு இருந்தால்தான் முடியும்.

முதலீட்டாளர்கள் தமிழகம் வருகை

தமிழகத்தில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றின. அதன் விளைவாக பெருநகரங்களில் வளர்ச்சியைக் காண முடிகிறது. சிறந்த உள்கட்டமைப்பு, தடையில்லா மின்சார வினியோகம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீட்டாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

என்னென்ன திட்டங்கள்?

ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் கனவான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை சுமார் ஆயிரத்து 652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்ற அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2021-ம் ஆண்டு இறுதிக்குள் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டு இந்த வறட்சியான பகுதியில் உள்ள மக்கள் செழுமையாகவும், இந்த மாவட்டங்களெல்லாம் பசுமையாகவும் காட்சியளிப்பதை காணப்போகிறோம்.

நொய்யல் ஆற்றை நவீனப்படுத்த ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கீழ்பவானி பாசனத் திட்டத்தை நவீனப்படுத்த ரூ.933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவிநாசி பகுதிகளில் ரூ.724 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் ரூ.980 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்து 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

234 தொகுதிகளிலும் வெற்றி

திருப்பூர் மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளில் ரூ.636 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலம் திருப்பூர் மாநகராட்சி, உடுமலைப்பேட்டை நகராட்சி, பல்லடம் நகராட்சி, அவிநாசி பேரூராட்சி, மடத்துக்குளம் பேரூராட்சி பகுதிகளில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இப்பணிகள் நிறைவேறும்போது இந்தப் பகுதி ஏழை, எளிய மக்களுக்கு சொந்தமாக வீடுகள் கிடைக்கும்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய கூட்டணியில் அங்கம் வகிக்கும் . வேட்பாளர்களுக்கு வாக்களித்து 234 தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து மீண்டும் அ.தி.மு.க. அரசு அமையச் செய்ய வேண்டும்.’

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story