4-ந் தேதி இரவு 7 மணி வரை பிரசாரத்துக்கு அனுமதி கடைசி நேரத்தில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு நடவடிக்கை


4-ந் தேதி இரவு 7 மணி வரை பிரசாரத்துக்கு அனுமதி கடைசி நேரத்தில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 1 April 2021 12:24 AM GMT (Updated: 1 April 2021 12:24 AM GMT)

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று அளித்த பேட்டி வருமாறு:-

தயாராகும் எந்திரங்கள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. முதல் குலுக்கலின் மூலம் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தொகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். அந்த பணிகள் முடிந்துவிட்டன. 2-ம் கட்ட குலுக்கலின்போது, அந்தந்த தொகுதிகளில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு, குறியீடு செய்யப்படும். சென்னை மாவட்டம் பெரிது என்பதால் அங்கு தவிர மற்ற மாவட்டங்களில் 2-ம் கட்ட குலுக்கல் பணிகள் முடிந்துவிட்டன.

இனி அந்த எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், எண் போன்ற விவரங்கள் பொருத்தப்படும். 6-ந் தேதி தேர்தல் என்பதால், வாக்குச்சாவடிகளுக்கு அந்த எந்திரங்கள் 5-ந் தேதியன்று கொண்டு செல்லப்படும். அதுவரை அந்தந்த தொகுதிகளில் உள்ள அதற்காக நியமிக்கப்பட்ட அறைகளில் எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.

திருச்சியில் நடந்தது என்ன?

திருச்சியில் போலீஸ் அதிகாரிகள் மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடு்த்துள்ளது. அந்த விவகாரம் சி.பி.ஐ.யிடம் அனுப்பப்படவில்லை. இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம்தான் காவல் துறை, மாவட்ட தேர்தல் அதிகாரி, சிறப்பு பார்வையாளர் ஆகியோரிடம் இருந்து தகவல்களைப் பெற்று அந்த முடிவை எடுத்துள்ளது.

இதில் யார் யார் என்ன தகவல் கொடுத்தனர் என்பது எனக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கையை பெற்று தேர்தல் ஆணையம் உத்தரவுகளை பிறப்பிக்கும். திருச்சி விவகாரத்தில் யார் மீது தவறு உள்ளது? என்றும், தி.மு.க. வேட்பாளர் நேருவை வழக்கில் இருந்து காப்பாற்ற அவரை வழக்கில் சேர்க்காததால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றும் கேட்கிறீர்கள்.

ரகசியங்கள்

தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது.

இதில் சில ரகசியங்களை பாதுகாக்கும் கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. வெவ்வேறு துறைகளிடம் இருந்து அறிக்கை பெறும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. எனவே இதில் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாது. கோர்ட்டு போல தேர்தல் ஆணையம் தீர்ப்பு பிறப்பிக்காது.

சில அவசர நடவடிக்கையின் பேரில் அதுபோன்ற உத்தரவுகளையே ஆணையம் பிறப்பிக்கிறது. அந்த விவகாரத்தில் தி.மு.க.வும் புகார் அளித்துள்ளது. அதுவும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

திரும்பிச்சென்ற பார்வையாளர்கள்

தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் மீதும் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. பறக்குபடை அலுவலரை அமைச்சர் கடம்பூர் ராஜூ மிரட்டியதாக வந்த புகார் குறித்து அந்த மாவட்டத்தில் இருந்து அறிக்கை பெறப்பட்டு, வீடியோ படத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதோடு, தனியாக தேர்தல் பார்வையாளர்களிடமும் இருந்தும் ஆணையம் அறிக்கை பெறும். அது என்னிடம் வராது.

தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்தவர்கள் யாரும் திருப்பி அனுப்பப்படவில்லை. கொரோனா பாதிப்பு, தனிப்பட்ட பிரச்சினை இருந்தால் அவர்கள் செல்கிறார்கள். அதுபோல 5 அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மாற்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு குற்றச்சாட்டின் பேரில் யாரும் திருப்பி அனுப்பப்படவில்லை.

பிரசாரம் முடியும் நேரம்

வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் இருந்து (6-ந் தேதி இரவு 7 மணி) 48 மணி நேரத்திற்கு முன்பு வரை (4-ந் தேதி இரவு 7 மணி வரை) தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளலாம். அதன்படி, 4-ந் தேதி இரவு 7 மணியுடன் பிரசாரம் முடிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் குறித்துள்ள நேரத்திற்கு பிறகு யாரும் பிரசாரம் செய்யக்கூடாது.

அதுபோல தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகளையும் வெளியிடக்கூடாது.

கொரோனா நோயாளிகள்

வீட்டில் தனிமையில் இருக்கும் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி ஒரு கடிதம் கொடுப்பார். அதன் மூலம் மருத்துவ அலுவலரது சான்றிதழ் பெற்று வாக்குச்சாவடிக்கு அந்த நோயாளி வர வேண்டும். மிகவும் முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு சான்றிதழ் தர வாய்ப்பில்லை.

கொரோனா தொற்று இருந்தாலும், வெளியே வரக்கூடியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. தனி வாகனத்தில் தனி ஓட்டுநர் அமர்த்தி வரலாம். நாங்கள் வாகன ஏற்பாடு செய்யவில்லை. தமிழகத்தில் சில ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கையுடன் வாக்குச்சாவடி எண்ணிக்கையை கணக்கிட்டால் மிகக்குறைவான கொரோனா நோயாளிகள்தான் வாக்குச்சாவடிகளுக்கு வரக்கூடும்.

சில இடங்களில் அதிக தொற்று இருக்கலாம். எனவே அதுபோன்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவோம். அதுபோன்ற இடங்களில் முழு கவச உடையுடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் இருப்பார்கள். அங்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கும் அதுபோன்ற உடை தரப்படும்.

பிடிபட்டவை

முந்தைய தேர்தல் நிகழ்வுகளின்படி 105 தொகுதிகளை தேர்தல் செலவின பிரச்சினைகள் உள்ளதாக கணக்கிட்டுள்ளோம். சேலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.42.47 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பிடிபட்டுள்ளன. தமிழகத்தில் இதுதான் அதிகபட்சம். சென்னையில் ரூ.36.73 கோடி மதிப்புள்ள ரொக்கம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினால் கைப்பற்றப்பட்டவையாகும்.

வருமான வரித்துறை மூலமாக மட்டும் ரூ.66.47 கோடி பணம் பிடிபட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக சி-விஜில் மூலமாக 133 புகார்கள் வந்துள்ளன. அதில் 57 புகார்களில் உண்மை கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடைசி நேர பணப்பட்டுவாடா

2014-ம் ஆண்டு (நாடாளுமன்ற தேர்தலில்) ரூ.76.89 கோடி மதிப்புள்ள பணம், பொருட்களும்; 2016-ம் ஆண்டு (சட்டசபை) தேர்தலில் ரூ.139.40 கோடி மதிப்புள்ள பணம், பொருட்களும்; 2019-ம் ஆண்டு ரூ.952.01 கோடி பணம், பொருட்களும் பிடிபட்டன. அதில் தேர்தலின் கடைசி நேரத்தில் கண்டெய்னரில் பிடிபட்ட ரூ.500 கோடியும் சேரும். சிறப்பு செலவீன பார்வையாளருடன் சமீபத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் நடக்கும் பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் செலவின பார்வையாளர்கள் ஆலோசிப்பார்கள். அந்த தொகுதிகளில் உள்ள செலவின பிரச்சினை உள்ள சிறு சிறு பகுதிகளை கண்டறிவார்கள். பின்னர் அங்கு கூடுதலாக பறக்கும்படை, கண்காணிப்பு குழு போடப்படும்.

பொதுமக்கள் புகார்

எனவே பணப்பட்டுவாடா பற்றிய தகவல்களை சி-விஜில் செயலியில் பொதுமக்களும் அளிக்க வேண்டும். பொதுமக்களும் இதில் ஈடுபட்டால் பணப்பட்டுவாடாவை உடனடியாக முறியடிக்கலாம்.

இதுவரை 295 துணை ராணுவப்படைகள் வந்துள்ளன. தபால் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக எந்த புகாரும் வரவில்லை. தபால் வாக்கை முகநூலில் காண்பித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள், பாடல்கள் ஆகியவற்றை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

Next Story