மீனவர்கள் நலன்தான் எங்களது முன்னுரிமை கன்னியாகுமரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கடலோர வளர்ச்சிக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மீனவர்களின் நலன்தான் எங்களது முன்னுரிமை என்றும் கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
நாகர்கோவில்,
பிரதமர் நரேந்திரமோடி நேற்று மாலையில் குமரி மாவட்டத்தில் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் நின்றபடி நரேந்திர மோடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இயேசுவின் தியாகம்
‘‘நாஞ்சில் பொருணன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, செண்பகராமன் பிள்ளை, அய்யா வைகுண்டர், தாணுலிங்க நாடார், பெருந்தலைவர் காமராஜர், மார்ஷல் நேசமணி போன்ற தலைவர்கள் வாழ்ந்த மண்ணில் நான் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்.
கன்னியாகுமரி பகவதி அம்மனையும், நாகராஜா சுவாமியின் ஆசிகளை வேண்டி நிற்கிறேன். கன்னியாகுமரியில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் பல இந்தியர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
வாரிசு வளர்ச்சியில் கவனம்
நமது கவனம் எல்லாம் நாட்டின் வளர்ச்சி மீது இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் கவனம் எல்லாம் தங்களுடைய வாரிசுகளின் வளர்ச்சி பற்றி உள்ளது. அவர்கள் விரும்புவது எல்லாம் அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் வளமான வாழ்க்கைக்கு தேவையான சொத்துகளை சேர்த்து சந்தோஷமாக வாழவைப்பதில் உள்ளது. உங்கள் பிள்ளைகள், பேரன்-பேத்திகளின் வளர்ச்சி பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.
மனப்புழுக்கம்
தமிழகத்தின் நிலைமை என்னவென்றால் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தோளோடு தோள் நின்று பணியாற்றிய தி.மு.க. தலைவர்கள் எல்லாம் திடீரென மகுடம் சூட்டிக்கொண்டு வந்த இளவரசரை பார்த்து மனப்புழுக்கத்தில், தர்ம சங்கடத்தில் உள்ளனர்.
தேசத்தின் மனநிலை தெளிவாக உள்ளது. தகுதி பார்க்காமல் உறவுக்கு பதவி கொடுப்பதால், வாரிசு அரசியலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். மக்கள் எதிர்கட்சியினரை ஜனநாயக விரோதியாக பார்க்கிறார்கள்.
கடற்கரை அபிவிருத்தி
முந்தைய அரசு கடலோர பகுதியை பற்றி கவலைப்படவில்லை. கடற்கரையை அபிவிருத்தி செய்யவும், மீனவர்களை மேம்படுத்தவும் மத்திய அரசு விரிவான அணுகுமுறையை தற்போது பின்பற்றி வருகிறது.
கடலோர பகுதியை மேம்படுத்தும் வகையில் மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான தனி அமைச்சகம் மீனவர்கள் பிரச்சினையை கவனித்து வருகிறது.
முந்தைய தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மீனவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. மீனவர்களை உங்கள் தலைவிதிப்படி செல்லுங்கள் என்று அவர்களை கைகழுவி விட்டார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து 40 மீனவர்களையும், 4 படகுகளையும் மீட்டு வந்தோம். இன்றைய தேதியில் இலங்கயைில் எந்த இந்திய மீனவரும், இந்திய படகும் காவலில் இல்லை.
கூட்டத்துக்கு திரளாக வந்திருக்கும் உங்களுக்கு நன்றி. வருகிற 6-ந்தேதி எங்களை ஆசீர்வதியுங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அவர் தொடங்கும்போது தமிழில் வணக்கம் என்றும், முடிவில் தமிழில் நன்றி என்று கூறினார்.
Related Tags :
Next Story