தேர்தல் நடத்தை விதிமீறல்: மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 April 2021 4:57 PM GMT (Updated: 7 April 2021 4:57 PM GMT)

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாருக்கு பதிலளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், நேற்றுடன் 3வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வரும் ஏப்.10-ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மீது பா.ஜ.க. மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் நடக்க உள்ள கூஜ் பெகார் என்ற பகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் பெருமளவு உள்ளனர். இங்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது முஸ்லிம்களின் வாக்கு வங்கியை குறி வைத்து மதரீதியாகவும், பிரிவினை தூண்டும் விதமாகவும் பிரசாரம் செய்தார் என்றும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகும். இதனால் மம்தா பானர்ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாருக்கு பதிலளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story