ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியது ஈரான்: செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதா?


ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியது ஈரான்: செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதா?
x
தினத்தந்தி 30 Dec 2021 10:56 PM GMT (Updated: 30 Dec 2021 10:56 PM GMT)

3 சாதனங்களுடன் கூடிய ஒரு செயற்கைக்கோளை பீனிக்ஸ் என்ற புதிய ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்தி உள்ளது.

டெக்ரான், 

விண்வெளியில் ராக்கெட் ஒன்றை செலுத்தி உள்ளதாக ஈரான் கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என தெரியவில்லை.

அமெரிக்காவுடன் மோதல் போக்கு

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015-ம் ஆண்டு ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம்.

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சிக்காலத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு பின்னர் அங்கு ஜனாதிபதியாக வந்த டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் 2018-ம் ஆண்டு அறிவித்தார். அதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

ராக்கெட் தொடர் தோல்வி

இந்த நிலையில் விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் ஈரான் ஆர்வம் காட்டுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஈரான் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஜாபர் என்ற செயற்கைக்கோளை புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்த முடியாமல் போய்விட்டது.

இப்படி சமீப காலத்தில் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி ஈரான் தோல்விகளைத்தான் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளது.

புதிய ராக்கெட்டை ஏவியது

இந்த நிலையில், 3 சாதனங்களுடன் கூடிய ஒரு செயற்கைக்கோளை பீனிக்ஸ் என்ற புதிய ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஈரான் அரசு டிவி. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது எப்போது என்றோ, செயற்கைக்கோளில் பொருத்தப்பட்ட சாதனங்கள் பற்றியோ எந்த தகவலும் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் அந்த செயற்கைக்கோள், புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என்பது குறித்தும் உறுதியான தகவல் இல்லை.

ஆனால் ஈரான் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அகமது உசேனி இதுபற்றி கூறுகையில், “சிமோர்க் அல்லது பீனிக்ஸ் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 3 சாதனங்கள் விண்வெளியில் 470 கி.மீ. தொலைவுக்கு சென்றன. விண்வெளி மையத்தின் செயல்பாடுகள், ராக்கெட் செயல்திறன் சரியாக உள்ளது” என குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைக்கு மத்தியில்

ஈரானின் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக வியன்னாவில் 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஈரான் இதற்கு முன் ராக்கெட்டுகளை ஏவியபோது அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வந்துள்ளது நினைவுகூரத்தக்கது.


Next Story