புதின் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடியாது - ஜோ பைடன்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 27 March 2022 3:32 AM IST (Updated: 27 March 2022 3:32 AM IST)
t-max-icont-min-icon

ரஷிய அதிபர் புதின் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வார்சா,

உக்ரைன் மீது ரஷியா இன்று 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் - ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.  

இதற்கிடையில், உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பயணம் மேற்கொண்டுள்ளார். நேட்டோ நாடான போலாந்துக்கு சென்றுள்ள ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார். 

அதேபோல், போலாந்துக்கு வந்துள்ள உக்ரைன் மந்திரிகளுடனும் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் உக்ரைனில் இருந்து அகதிகளாக போலாந்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை ஜோ பைடன் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து நேட்டோ, அமெரிக்க படையினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஜோ பைடன் பேசினார். 

அப்போது ஜோ பைடன் பேசுகையில், கடவுளின் பொருட்டு இந்த நபர் (ரஷிய அதிபர் புதின்) அதிகாரத்தில் நீடிக்க கூடாது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்த போரின் திட்டம் தோல்வியடைந்துள்ளது. 

ரஷிய அதிபர் புதின் ஒரு போர் குற்றவாளி. அவர் பலரை இறக்கமின்றி கொல்பவர். நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த விளாடிமிர் புதின் முயற்சிக்கிறார். ஆனால், அவரால் அது முடியவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக உறுதுணையாக உள்ளோம்’ என்றார்.
1 More update

Next Story