கருங்கடலில் ரஷியாவின் ராட்சத போர்க்கப்பலை மூழ்கடிக்க உக்ரைனுக்கு ரகசிய தகவல்களை அளித்து உதவிய அமெரிக்கா!


கருங்கடலில் ரஷியாவின் ராட்சத போர்க்கப்பலை மூழ்கடிக்க உக்ரைனுக்கு ரகசிய தகவல்களை அளித்து உதவிய அமெரிக்கா!
x
தினத்தந்தி 7 May 2022 7:52 AM GMT (Updated: 7 May 2022 7:52 AM GMT)

கருங்கடலில் ரஷியாவின் முன்னணி போர்க்கப்பலின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா பகிர்ந்து கொண்ட உளவுத்துறை ரகசியங்கள் உதவிகரமாக இருந்தன.

வாஷிங்டன்,

உக்ரைன் மீதான ரஷிய போரில், கருங்கடலில் இருந்து கடல் வழி தாக்குதலை தலைமையேற்று நடத்தியது, மோஸ்க்வா என்ற பிரமாண்ட போர்க்கப்பல் ஆகும். இந்த கப்பல் கடந்த மாதம் 13-ந் தேதி தீப்பிடித்து பின்னர் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து கப்பல் தீப்பற்றியதாக ரஷியா கூறியது.

உக்ரைன்  2 நெப்டியூன் ஏவுகணைகளை ஏவி, மோஸ்க்வா கப்பல் தாக்கப்பட்டதாக கூறியது. இந்த கப்பலில் 510 மாலுமிகள் இருந்ததாகவும், மோஸ்க்வா கப்பல் தீயில் சிக்கி அதன் சிப்பந்தி ஒருவர் பலியாகி விட்டதாகவும், 27 பேர் காணாமல் போய் இருப்பதாகவும், 396 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உக்ரைனால் ரஷியாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்கடலில் ரஷியாவின் முன்னணி போர்க்கப்பலின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா பகிர்ந்து கொண்ட உளவுத்துறை ரகசியங்கள் உதவிகரமாக இருந்தன என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் ஏவுகணை தாங்கி செல்லும் கப்பலான மாஸ்க்வா, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போரில் மூழ்கிய மிகப்பெரிய ரஷிய போர்க்கப்பலாகும். இது இரண்டு உக்ரேனிய படைகளால் ஏவப்பட்ட எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 14 அன்று கடலில் மூழ்கியது. 

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி கருங்கடலில் உள்ள ரஷியக் போர்க்கப்பலைக் குறிவைத்து தாக்கும் முடிவு உக்ரைனின் தனிப்பட்ட முடிவு ஆகும். ஆனால் அந்த கப்பல்களின் இருப்பிடங்கள் உட்பட பலவிதமான உளவுத்துறையை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியது என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் சற்று பின்வாங்கிவிட்டதாக எழுந்த சந்தேகத்தை போக்கும் வகையில், ரஷிய கப்பலை தாக்க உக்ரைனுக்கு உதவியதை அமெரிக்க அரசு இப்போது உறுதிபடுத்தியுள்ளது.


Next Story