ஈரானில் அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 5 பேர் பலி


ஈரானில் அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 5 பேர் பலி
x

தெற்கு ஈரானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 49 பேர் காயம் அடைந்து உள்ளனர்.



தெஹ்ரான்,



ஈரான் நாட்டின் தெற்கே ஹார்முஜ்கன் மாகாணத்தில் ரிக்டரில் 6.0க்கும் கூடுதலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்டு உள்ளன. இதன்படி, முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை ரிக்டரில் 6.1 அளவில் பதிவானது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை தொடர்ந்து சில மணிநேரம் கழித்து ரிக்டரில் 6.3 அளவிலான 2 கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக ரிக்டரில் 4.0க்கும் கூடுதலான நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து உணரப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்நிலநடுக்கங்களால், கிராம பகுதிகளில் சில வீடுகள் சேதமடைந்து உள்ளன. பல பாலங்களும் இடிந்து விழுந்துள்ளன. சாலைகளில் சில பகுதிகளில் நில சரிவுகளும் ஏற்பட்டன.

நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு ஆம்புலன்சுகளும், ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என அந்நாட்டு அவசரகால செய்தி தொடர்பாளர் மொஜ்தபா காலேதி கூறியுள்ளார். சில பகுதிகளில் மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டன என்றும் பின்னர் அவை சரி செய்யப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 49 பேர் காயம் அடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன என்றும், மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story