பாகிஸ்தானில் பிப்ரவரியில் பயங்கரவாத தாக்குதல்கள் 32 சதவீதம் அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்


பாகிஸ்தானில் பிப்ரவரியில் பயங்கரவாத தாக்குதல்கள் 32 சதவீதம் அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்
x

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில், பிப்ரவரியில் பயங்கரவாத செயல்கள் 32 சதவீதம் அதிகரித்து உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.


லாகூர்,


பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜனவரியில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றின் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் போலீஸ் உயரதிகாரிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்தது.

இந்நிலையில், அந்நாட்டில் கடந்த மாதத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன என அறிக்கை ஒன்று அதிர்ச்சி தெரிவிக்கின்றது. இதன்படி, கடந்த பிப்ரவரியில் 58 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து உள்ளன.

இவற்றில் 27 பொதுமக்கள் உள்பட மொத்தம் 62 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில், பாதுகாப்பு படையினர் 18 பேர் மற்றும் பயங்கரவாதிகள் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த தாக்குதல்களில் 54 பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் 80 பேர் என மொத்தம் 134 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை பாகிஸ்தானுக்கான மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த தகவலின்படி, கடந்த 2015-ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரையில், ஒரு மாதத்தில் 58 தாக்குதல்களை பாகிஸ்தான் சந்தித்து இருப்பது முதன்முறை ஆகும்.

இதன்படி, பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில், பிப்ரவரியில் பயங்கரவாத தாக்குதல்கள் 32 சதவீதம் அதிகரித்து உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

எனினும், கடந்த ஜனவரியுடன் ஒப்பிடும்போது, பிப்ரவரியில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்தபோதும் உயிரிழப்பு சரிந்து உள்ளது. இது 56 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது. இதேபோன்று, பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால், பிப்ரவரியில் சந்தேகத்திற்குரிய 75 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story