தென்கொரியாவில் பள்ளி பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்- 30 பேர் படுகாயம்

பள்ளி மாணவர்கள் சென்ற 4 பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சியோல்,
தென்கொரியாவில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 4 பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான கேங்வோனில் நேற்று பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு 4 பஸ்கள் புறப்பட்டன. இதில் ஒரு பஸ் ஹாங்சியோன் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. எனவே முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக மோதியது.
இதனையடுத்து அதன் பின்னால் வந்த 3 லாரிகள் மற்றும் ஒரு கார் அதன் மீது ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஸ்சில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
எனினும் இந்த சங்கிலித்தொடர் விபத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்கள் சென்ற 4 பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.