லிபியாவில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி


லிபியாவில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி
x

கோப்பு படம்

தினத்தந்தி 20 Feb 2024 7:03 PM GMT (Updated: 20 Feb 2024 7:14 PM GMT)

படகு கவிழ்ந்ததில் வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

டாக்கா,

அரசியல் ஸ்திரத்தன்மையற்ற லிபிய நாட்டின் கடற்கரையில் இருந்து ஐரோப்பாவுக்கு சிலர் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். அந்த படகில் பாகிஸ்தான், எகிப்து, சிரியா மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களும் பயணித்து உள்ளனர்.

ஐரோப்பாவுக்கு சென்று விட்டால் நல்ல வேலை மற்றும் வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு துரதிர்ஷ்டமே காத்திருந்தது.

மத்திய தரைக்கடல் வழியே சென்ற அந்த அகதிகளின் படகு துனீசியா கடலோர பகுதியில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் 53 பேர் இருந்தனர் என கூறப்படுகிறது. பலரின் நிலைமை என்னவென தெரியவில்லை.

இதுபற்றி வங்காளதேச அரசு நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்ட செய்தியில், வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என தெரிவித்து உள்ளது. இதனை அந்நாட்டு வெளிவிவகார துறை உறுதிப்படுத்தியது.

அவர்களில் 5 பேர் வங்காளதேச நாட்டின் மதரிப்பூர் மற்றும் 3 பேர் கோபால்கஞ்ச் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேர் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.


Next Story