இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்


இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
x

இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு,

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின.

மேலும் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, அதில் திருத்தங்களை கொண்டுவரவும் பரிந்துரைத்தது. ஆனால் எந்தவித திருத்தங்களும் செய்யப்படாமல் ஜனவரி 24-ந்தேதி நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனே பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி அவருக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய, தேசிய மக்கள் சக்தி, இலங்கை சுதந்திரக் கட்சி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த 44 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்ற துணை பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னேவிடம் வழங்கப்பட்டது.

இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அபேவர்தனே நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரவேற்றுள்ளார். சுதந்திர இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற சபாநாயகர் ஒருவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story