நாங்கள் செய்வது உடல்களை எண்ணுவதுதான் - காசா சுகாதார அதிகாரி தகவல்


நாங்கள் செய்வது உடல்களை எண்ணுவதுதான் - காசா சுகாதார அதிகாரி தகவல்
x

Image Courtacy:AFP

தினத்தந்தி 6 Dec 2023 11:19 PM GMT (Updated: 7 Dec 2023 7:00 AM GMT)

இடைவிடாத குண்டு வீச்சுக்கு மத்தியில் தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது.

காசா,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி போர் வெடித்தது. இந்த போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த சூழலில் சர்வதேச நாடுகளின் முயற்சியால் இந்த போர் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது ஹமாஸ் தங்கள் வசம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பணய கைதிகளை விடுவித்தனர்.

அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன கைதிகள் சுமார் 250 பேரை இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது. அதோடு இந்த போர் நிறுத்த காலத்தில் காசா மக்களுக்கு அதிகப்படியாக மனிதாபிமான உதவிகள் கிடைத்தன. இதனால் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. எனவே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததுமே இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீது முழு வேகத்தில் தாக்குதல் நடத்த தொடங்கியது.

தெற்கு காசாவை முக்கிய இலக்காக கொண்டு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அங்குள்ள கான் யூனிஸ் நகரம் இஸ்ரேலின் தாக்குதலில் சின்னாபின்னமாகி உள்ளது. அங்கு கடுமையான குண்டு வீச்சுடன் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் விரிவுபடுத்தி வருகிறது. கான் யூனிஸ் நகர தாக்குதலுக்கு பிறகு தெய்ர் அல்-பலா நகரத்தை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருவதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல் மிகப்பெரிய அளவிலான மனித இடப்பெயர்வுக்கு வழிவகுக்கும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. சுமார் 18.7 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடப்பெயர்ந்துள்ள நிலையில், ஏற்கனவே குறைவாக கிடைக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதி பகிர்மானத்தை இந்த தாக்குதல் மேலும் பாதிக்கும் எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

இதனிடையே தெற்கு காசாவில் தீவிர தாக்குதல்கள் நடந்து வரும் அதே வேளையில் காசாவின் பிற பகுதிகளிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றன. இதில் பொதுமக்கள் இடம்பெயர்வதற்காக இஸ்ரலே் ராணுவத்தால் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்களும் அடங்கும்.

அந்த வகையில் கான் யூனிஸ் நகருக்கு வடக்கே உள்ள மத்திய காசா நகரமான டெய்ர் அல்-பாலாவில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு வீட்டின் மீது குண்டு வீசப்பட்டதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 34 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் அங்கு உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காசாவில் இதுவரை 16,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 42 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் உள்ள சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் முனிர் அல்-புர்ஷ், இஸ்ரேலிய ராணுவ தாக்குதலில் தனது உறவுகள் பலரை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, நம்பிக்கையைக் கொல்ல விரும்புகிறது, அது நமது இளைஞர்கள், எங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொல்ல விரும்புகிறது. இஸ்ரேலிய படைகள் "குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்று வேறுபடுத்துவதில்லை". உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இன்று, காசாவில் காயமடைந்தவர்கள் இரத்தப்போக்கு காரணமாக இறக்கின்றனர்... அவர்களுக்காக எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் [இஸ்ரேலியப் படைகள்] மருத்துவமனைகளில் தங்களுடைய பொருட்களைக் காலி செய்து, ஏராளமான உடல்களுக்கு சவக்கிடங்காக விட்டுச் சென்றனர். நாங்கள் செய்வது உடல்களை எண்ணுவதுதான்" என்று முனிர் அல்-புர்ஷ் தெரிவித்தார்.


Next Story