அமெரிக்கா: கப்பல் மோதி உடைந்த பாலம்; பலர் பலி என அச்சம்? வைரலான வீடியோ


அமெரிக்கா:  கப்பல் மோதி உடைந்த பாலம்; பலர் பலி என அச்சம்? வைரலான வீடியோ
x
தினத்தந்தி 26 March 2024 1:23 PM IST (Updated: 26 March 2024 1:41 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் உடைந்ததும் அதில் சென்ற வாகனங்கள் நீரில் விழுந்ததுடன், 7 பேர் சிக்கி கொண்டனர்.

நியூயார்க்,

அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது பெரிய கப்பல் ஒன்று இன்று அதிகாலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான அந்த சரக்கு கப்பல் பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது என கடலோர காவல் படையை சேர்ந்த மேத்யூ வெஸ்ட் என்பவர் கூறியுள்ளார்.

இந்த விபத்தில், 2 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து நீருக்குள் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் விழுந்தன. இந்த சம்பவத்தில், பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து கொண்டது. பின்னர் அது நீரில் மூழ்கியது.

இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடைந்தனரா? என்ற விவரம் உடனடியாக வெளிவரவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் பால்டிமோர் நகர தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். காவல் துறை அதிகாரிகளும் நிலைமை பற்றி அறிந்து கொள்ளவும், மீட்பு பணி மேற்கொள்ளவும் விரைந்து சென்றுள்ளனர்.

இதில், வாகனங்கள் நீரில் விழுந்ததில் சிக்கி தவித்து வரும் 7 பேரை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவர்கள் பாலத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. இதேபோன்று சில வாகனங்களும் நீரில் விழுந்தன.

இந்த விபத்து எதிரொலியாக, பாலத்தின் இருபுறமும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது என்று மேரிலேண்ட் போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story