செயற்கை இனிப்பூட்டிகள் நன்மையா..!! உலக சுகாதார அமைப்பு அறிக்கை கூறுவது என்ன...?


செயற்கை இனிப்பூட்டிகள் நன்மையா..!! உலக சுகாதார அமைப்பு அறிக்கை கூறுவது என்ன...?
x
தினத்தந்தி 16 May 2023 10:55 AM GMT (Updated: 16 May 2023 11:22 AM GMT)

செயற்கை இனிப்பூட்டிகள் பயன்பாட்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது.

ஜெனீவா,

அதிகம் சாப்பிட்டால் குண்டாகி விடுவாய்... என்று நொறுக்கு தீனியை குறிப்பிட்டு, எச்சரிக்கும் வகையில் முன்பொரு விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். எனினும், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதில் குழந்தைகளுக்கு உள்ள ஆர்வம் குறைவதில்லை.

அதன்பின் அவர்கள் அதிக எடை, உடல் பருமன் என அவதிப்படும்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதற்குள் அவர்கள் வளர்ந்தும் விடுகின்றனர்.

ஒரு கட்டத்திற்கு பின்னர் உடல் எடையை குறைப்பது என்பது சற்று சிரமம் ஆகிவிடும். உடல் பருமனால் வேறு சில வியாதிகளும் எளிதில் தொற்ற கூடும்.

உலகம் முழுவதும் உடல் எடை அதிகரித்தல், உடல் பருமன் ஆகியவற்றால் பலர் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றனர். அதுவும் சிறு வயதிலேயே பலருக்கு தற்போது உடல் பருமன் பாதிப்பு காணப்படுகிறது.

இந்த சூழலில், குழந்தைகளின் உடலில் கொழுப்பை குறைப்பதற்காக, செயற்கை இனிப்பூட்டிகளின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்றும் இதனால், தொற்றில்லா வியாதிகளின் ஆபத்து குறையும் என்றும் கூறப்படுகிறது.

பொதுவான சர்க்கரையல்லாத இனிப்பூட்டிகளாக ஏஸ்சல்பேம், அஸ்பர்டாமே, அட்வான்டாமே, சைக்ளமேட்ஸ், நியோடாமே, சாக்கரின், சுக்ரலோஸ், ஸ்டீவியா மற்றும் ஸ்டீவியா உபபொருட்கள் ஆகியன உள்ளன.

இவற்றை எடுத்து கொள்வது, அதிக பயன்பாடு உள்ளிட்ட விசயங்களை பற்றி குறிப்பிட்டு, செயற்கை இனிப்பூட்டிகள் பயன்பாட்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது.

இதற்காக, சில சான்றுகளை கொண்டு சீராக ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் பரிந்துரைகைளை வெளியிட்டு உள்ளது. இந்த சர்க்கரையல்லாத இனிப்பூட்டிகள், முதியவர்கள் அல்லது குழந்தைகளுக்கு உடல் கொழுப்பு குறைப்பில் எந்தவித நீண்டகால பலனையும் அளிக்காது என தெரிவிக்கின்றது.

இதுபோன்ற சர்க்கரையல்லாத இனிப்பூட்டிகள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படும்போது, டைப் 2 டயாபடீஸ், இருதய வியாதிகள் மற்றும் முதியவர்களில் இறப்பு ஏற்படுவது போன்றவிரும்பத்தகாத சில ஆற்றல்மிக்க எதிர்விளைவுகள் ஏற்பட கூடும் என்றும் இந்த ஆய்வின் முடிவு எச்சரிக்கை தெரிவிக்கின்றது.

இதுபற்றி அந்த அமைப்பின் ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்புக்கான இயக்குநர் பிரான்சிஸ்கோ பிராங்கா கூறும்போது, சர்க்கரைக்கு பதிலாக சர்க்கரை இல்லாத இனிப்பூட்டிகளை பயன்படுத்தும்போது, அது உடல் எடையை நீண்டகாலத்திற்கு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவாது.

சர்க்கரை எடுத்து கொள்ளும் பயன்பாட்டை குறைப்பதற்கு, இதற்கு பதிலாக பிற வழிகளை பரிசீலிக்க வேண்டிய தேவை மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

இயற்கையில் சர்க்கரை கிடைக்க கூடிய உணவை எடுத்து கொள்ளலாம். இதற்கு பழம் அல்லது இனிப்பூட்டி சேர்க்கப்படாத உணவு மற்றும் குளிர்பானங்களை எடுத்து கொள்ளலாம் என ஆலோசனை கூறுகிறார்.

இந்த செயற்கை இனிப்பூட்டிகள், அத்தியாவசிய உணவு காரணிகள் கிடையாது. ஊட்டச்சத்து மதிப்பும் அவற்றுக்கு கிடையாது. உடல் சுகாதாரம் மேம்பட மக்கள் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே, உணவில் தித்திப்பை குறைக்க வேண்டும் என அவர் கூறுகிறார். முன்பே டயாபடீஸ் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்த்து, அனைவருக்கும் இந்த பரிந்துரை பொருந்தும் என தெரிவித்து உள்ளது.

எனினும் இந்த பரிந்துரையானது, தனிநபர் நலன் மற்றும் சுகாதாரம் சார்ந்த பற்பசை, தோல் கிரீம் மற்றும் மருந்துகள் போன்ற பொருட்களுக்கு பொருந்துவதில்லை.

இதேபோன்று குறைந்த கலோரி கொண்ட சர்க்கரை மற்றும் சர்க்கரை அல்லது சர்க்கரையில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட, கலோரிகள் நிறைந்த, பாலியோல் எனப்படும் சர்க்கரை கலந்த ஆல்கஹால்கள் ஆகியவற்றுடன் சர்க்கரையல்லாத இனிப்பூட்டிகள் கலந்த பொருட்களுக்கு இந்த பரிந்துரை பொருந்துவதில்லை.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளானது, வாழ்நாள் முழுமைக்கான சுகாதார உணவு பழக்கங்கள், உணவின் தரமேம்பாடு மற்றும் உலகம் முழுவதிலும் தொற்றில்லா வியாதிகளின் ஆபத்துகளை குறைப்பதற்கான விசயங்களை நிலைநிறுத்தும் நோக்கங்களை கொண்ட சுகாதார உணவுகளுக்கான தற்போது இருக்கும் மற்றும் வரவுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியே என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.


Next Story