பழிக்குப்பழி நடவடிக்கை: இந்திய பத்திரிக்கையாளரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட சீனா...!
நாட்டை விட்டு இந்த மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்று கடைசி இந்திய பத்திரிக்கையாளருக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.
பிஜீங்,
கல்வான் மோதலுக்கு பின் இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தூதரக ரீதியிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்ற நிலையில் சீன பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு இந்தியா தற்காலிக விசா வழங்கியது. அதன் பின்னர் விசா புதுப்பிக்கப்படவில்லை. 2020ம் ஆண்டு இந்தியாவில் 14 சீன பத்திரிக்கையாளர்கள் இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 1 ஆக குறைத்துள்ளது.
விசா புதுப்பிக்காமல் சீன பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா அனுமதி மறுத்ததற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, சீனாவில் மொத்தம் 4 இந்திய பத்திரிக்கையாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 1 ஆக குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் விசா முடக்கப்பட்டதையடுத்து 2 இந்திய பத்திரிக்கையாளர்கள் சீனா செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எஞ்சிய 2 பத்திரிக்கையாளர்களில் ஒருவர் கடந்த வாரம் இந்தியா திரும்பிவிட்டார்.
பிடிஐ செய்தி முகமையின் பத்திரிக்கையாளர் ஒருவர் மட்டுமே சீனாவில் தற்போது உள்ள நிலையில் அவரது விசாவும் புதுப்பிக்கப்படவில்லை. மேலும், இந்திய பத்திரிக்கையாளரை இந்த மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி சீனா உத்தரவிட்டுள்ளது.
அந்த பத்திரிக்கையாளர் வெளியேறும்பட்சத்தில் சீனாவில் இந்திய பத்திரிக்கையாளர்கள் யாரும் செயல்படாத நிலை ஏற்படும். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள எஞ்சிய ஒரே ஒரு சீன பத்திரிக்கையாளரின் விசா புதுப்பிப்பை இந்தியா நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரிக்கையாளர்கள் அனுமதி விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.