"கொரோனாவிற்கு எதிரான போரில் சீனாவுக்கு கடுமையான சவால்கள் உள்ளன" - சீன அதிபர் ஜின்பிங்


கொரோனாவிற்கு எதிரான போரில் சீனாவுக்கு கடுமையான சவால்கள் உள்ளன - சீன அதிபர் ஜின்பிங்
x

கொரோனாவிற்கு எதிரான போரில் சீனா தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதாகவும், கொரோனாவுக்கு பலர் இறந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த வித தகவல்களையும் சீனா தெரிவிக்கவில்லை.

அதே சமயம் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன. விமான நிலையங்களுக்கு சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அசாதாரண முயற்சிகளால், நாம் முன்னெப்போதும் இல்லாத சிரமங்களையும் சவால்களையும் வென்றுள்ளோம், இது யாருக்கும் எளிதான பயணமாக இருக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.

மேலும் கொரோனாவிற்கு எதிரான போரில் சீனா தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது என்றும், இதில் சீனாவிற்கு கடுமையான சவால்கள் உள்ளன என்றும் ஜின்பிங் தெரிவித்தார். மேலும் சீன மக்களின் முன்னே நம்பிக்கையின் ஒளி உள்ளது என்றும் விடாமுயற்சி, ஒற்றுமை மூலம் கஷ்டங்களை கடந்து வெற்றி பெறுவோம் என்றும் அதிபர் ஜின்பிங் கூறினார். இருப்பினும் தனது உரையின் போது சீனாவில் தற்போதைய கொரோனா பரவல் குறித்த தரவுகள் எதையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story