'எல்லையில் உங்கள் வீரர்களை கட்டுப்படுத்துங்கள்' - இந்தியாவுக்கு சீனா அறிவுரை


எல்லையில் உங்கள் வீரர்களை கட்டுப்படுத்துங்கள் - இந்தியாவுக்கு சீனா அறிவுரை
x

தங்கள் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

பீஜிங்,

அருணாச்சலபிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யங்ட்சி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9-ம் தேதி இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைய முற்பட்டன.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் சீன படையுடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. மோதலின்போது இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன படைகளை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடைந்தனர்.

இந்நிலையில், இந்திய படைகள் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக சீன ராணுவத்தின் மேற்கு பிரிவு செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை சீன-இந்திய எல்லையில் சீன பக்கத்தில் உள்ள டாங்ஹங் பகுதியில் உண்மை எல்லைக்கோடு பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, இந்திய வீரர்கள் அத்துமீறி எல்லையை கடந்து சீன வீரர்களை தடுத்தனர். அந்த சூழ்நிலையை சீனபடைகள் மிகவும் தொழில்முறையில், நிலையான மற்றும் சக்திவாய்ந்த நடவடிக்கை மூலம் எதிர்கொண்டனர். தற்போது அந்த பகுதியில் இருந்து இந்திய-சீன படைகள் விலக்கப்பட்டுவிட்டன.

இந்தியா தங்கள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை கண்டிப்புடன் கட்டுப்படுத்த வேண்டும். எல்லையில் அமைதியை பேண இந்தியா சீனாவுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story