ரூ.1.46 கோடி செலவு செய்து உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை: 5 அடி வாலிபருக்கு நேர்ந்த சோகம்


ரூ.1.46 கோடி செலவு செய்து உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை: 5 அடி வாலிபருக்கு நேர்ந்த சோகம்
x

எப்போதும் அழகு அழகு என்று அழகின் பின்னால் ஓடாதீர்கள் என எச்சரிக்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள்.

கொலம்பியா,

இன்றைய நவீன காலகட்டத்தில், பெரும்பாலானோர் தங்கள் அழகை மேம்படுத்த பல அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். உதடுகள், மூக்கு, கண்கள், காதுகள், இடுப்பு, வயிறு என உடலின் பல பாகங்களில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் கைகொடுக்குமா என்பது கேள்வி குறிதான். பலமுறை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சிலர் உயிர் இழந்துள்ளனர். இதுகுறித்த பல செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.

அந்தவகையில், உயரத்தை அதிகரிக்க 29 வயது இளைஞர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்போது அவர் படாதபாடு பட்டு வருவதாக குமுறி உள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உயரம் 2 அங்குலம் அதிகரித்துள்ளதாக கூறினார். ஆனால் உயரம் அதிகரிப்பை விட அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், இதனால் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், சரியாக தூங்க கூட முடியவில்லை என்றும் வேதனையாகக் கூறியுள்ளார்.

உயரமாவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் பெயர் ஜெபர்சன் கோசியோ. இவர் கொலம்பியாவில் வசிக்கிறார். ஜெபர்சன் முதலில் 5 அடி 8 அங்குலம்தான் இருந்தாராம். நான்கு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் தனது உயரத்தை 6 அடியாக உயர்த்தியுள்ளார் என்று அவர் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சைக்காக சுமார் 1.46 கோடி ரூபாய் செலவிட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்கு வலி அதிகரித்துள்ளதாம். அது குறையவில்லை. இரவு மாத்திரை சாப்பிட்டாலும் தூக்கம் வரவில்லை. தற்போது வலியை நிறுத்துவதற்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய போகிறாராம். அதுபோல், அவருக்கு தசைகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கான அறுவை சிகிச்சை வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும் அழகு அழகு என்று அழகின் பின்னால் ஓடாதீர்கள். அழகுக்காக நீங்கள் செய்யும் காரியம் மோசமான பின்விளைவுகளை விளைவிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள் என எச்சரிக்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள்.


Next Story