போதை பொருள் பயன்படுத்தினாரா மஸ்க்...? உயரதிகாரிகளின் பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு


போதை பொருள் பயன்படுத்தினாரா மஸ்க்...? உயரதிகாரிகளின் பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
x

எலான் மஸ்க்கின் ஆல்கஹால் அணுகுமுறை மற்றும் போதை பொருள் பயன்பாட்டால், முன்னாள் இயக்குநரான லிண்டா ஜான்சன் ரைஸ் பணியில் இருந்து வெளியேறினார்.

நியூயார்க்,

உலக பணக்காரர்களில் ஒருவர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளராக இருப்பவர் எலான் மஸ்க். டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ள மஸ்க், பின்னர் அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார்.

இந்நிலையில், அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர், உலகம் முழுவதும் நடக்க கூடிய விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போது கோக்கைன், எல்.எஸ்.டி., எக்ஸ்டஸி மற்றும் கேட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தினார் என்றும் அதனால், அந்த நிறுவனங்களின் வாரிய உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் உயரதிகாரிகள் பலரும், எலான் மஸ்க் மீது அதிரடியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். போதை பொருட்களை மஸ்க் பயன்படுத்துகிறார் என்று அவருடைய பணியாளர்கள் பலரும் உணர்ந்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.

எலான் மஸ்க்கின் இந்த ஆல்கஹால் அணுகுமுறை மற்றும் போதை பொருள் பயன்பாடு ஆகியவற்றால், 2019-ம் ஆண்டு முன்னாள் இயக்குநர்களில் ஒருவரான லிண்டா ஜான்சன் ரைஸ் என்பவர் பணியில் இருந்து வெளியேறினார். டெஸ்லாவின் தலைவரான ராபின் டென்ஹோம் உள்பட பல்வேறு டெஸ்லா இயக்குநர்கள் மஸ்க்கின் இந்த நடவடிக்கை பற்றி அவருடைய சகோதரர் கிம்பல் மஸ்க்கை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர் என்றும் தெரிவித்தது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மஸ்க், தன்னிடம் இருந்து போதை பொருள் அல்லது ஆல்கஹால் உள்ளிட்ட எந்தவித பொருட்களும் இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்படவில்லை என கூறினார்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்திக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மஸ்க்கின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பைரோ, பொய்யான தகவல்களை அந்த செய்தி கொண்டிருக்கிறது என்றார்.

கடந்த 2018-ம் ஆண்டு மரிஜுவானா என்ற போதை பொருளை மஸ்க் புகைப்பது போன்ற வீடியோ வெளியானபோது, சர்ச்சை ஏற்பட்டது. இந்த வீடியோ வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியதும், ஒரே ஒரு முறை புகையை இழுத்தேன் என அப்போது மஸ்க் கூறினார்.

இதனை குறிப்பிட்டு, எக்ஸ் சமூக ஊடகத்தில் மஸ்க் வெளியிட்டுள்ள செய்தியில், இதனை ஒப்பு கொண்டு விட்டு, நாசாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப, 3 ஆண்டுகளுக்கு போதை பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டேன். பரவலாக 3 ஆண்டுகளில் நடந்த போதை பொருள் பரிசோதனையில் தன்னிடம் இருந்து எந்தவித போதை பொருட்களும் கண்டறியப்படவில்லை என மஸ்க் பதிவிட்டு உள்ளார்.

அவருடைய வாழ்க்கையை பற்றிய புத்தகம் எழுதும் வால்டர் ஈசாக்சன் என்பவரிடம், சட்டவிரோத செயல்களை செய்வதில் உண்மையில் தனக்கு விருப்பமில்லை என்று மஸ்க் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில் ஸ்டார்லிங்கின் நேரடி போன் தொடர்புக்கான சாட்டிலைட்டுகளின் அறிமுகம் பற்றி மஸ்க் அறிவிப்பு வெளியிட்டார். குறைந்த விலையில் மக்களுக்கு இன்டர்நெட் சேவையை வழங்கும் நோக்கத்துடன், ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் சார்பில் இந்த சாட்டிலைட்டுகள் மேம்படுத்தப்படுகின்றன.

இதுபற்றி மஸ்க் அவருடைய வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், இதனால், பூமியின் எந்த பகுதியில் இருந்தும் மொபைன் போன் வழியே தொடர்பு கொள்ள முடியும். இது தற்போதுள்ள தொலைதொடர்பு நெட்வொர்க் நிறுவனங்களுக்கு போட்டியில்லை என குறிப்பிட்டார்.

தொலைதொடர்பு நெட்வொர்க் இணைப்பு கிடைக்க பெறாத பகுதிகளில் தீர்வு காணும் வகையில், பூமி முழுவதும் மொபைல் போன் வழியே தொடர்பு கொள்வதற்கான சேவையை ஸ்டார்லிங்கின் நேரடி போன் சாட்டிலைட்டுகள் வழங்கும். இதன்படி தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிவிரைவு நெட்வொர்க் ஆனது, மக்களை சென்றடையும்.


Next Story