தைவானில் நிலநடுக்கம்: இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு


தைவானில் நிலநடுக்கம்: இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு
x

தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்ணை இந்திய தைப்பே சங்கம் அறிவித்து உள்ளது.

தைப்பே,

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கின. சில சரிந்து விழுந்தன. தைப்பேவில் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. ரெயிலில் பயணம் செய்தபோது, ரெயில் குலுங்கியபடி சென்ற வீடியோ காட்சிகள் வெளிவந்து உள்ளன.

காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் எதிரொலியாக மக்கள் அலறியடித்து, பாதுகாப்பான இடங்களை தேடி தஞ்சம் அடைந்தனர். சாலைகளில் கார்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றில் செல்லும்போது நிலநடுக்கம் உணரப்பட்டது. பாலங்களும் அதிர்வால் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 50 பேர் காயமடைந்தனர்.

தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில், 1999-ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக, 2,400 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்நிலநடுக்கம் உணரப்பட்டதும் ஜப்பானில் 15 நிமிடங்களுக்கு பின்னர் யோனகுனி கடலோரத்தில் 30 செ.மீ. உயரத்திற்கு அலைகள் எழும்பின. மியாகோ மற்றும் யேயாம தீவுகளிலும் அலைகள் உயரே எழுந்து வீசக்கூடும் என கூறப்படுகிறது.

அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்நாட்டின் ஒகினவா மாகாணத்தின் தெற்கே கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டு உள்ளன. இதேபோன்று பிலிப்பைன்சிலும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்ணை இந்திய தைப்பே சங்கம் அறிவித்து உள்ளது. அதன்படி, தைவானில் உள்ள இந்தியர்கள் உதவிக்கு 0905247906 என்ற எண்ணிலும் ad.ita@mea.gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றுமாறும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story