"அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடரும்" - ஈரான்


அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடரும் - ஈரான்
x

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் ஏற்கனவே ஒருமித்த கருத்தை எட்டியுள்ளது என ஈரான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

டெஹ்ரான்,

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. இதையடுத்து அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஈரான் ஒவ்வொன்றாக புறக்கணித்து வந்தது. அதே சமயம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்ததால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது.

இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடர முயற்சிகள் நடந்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனானி, சர்வதேச அணுசக்தி முகமையுடன் பல்வேறு பரிமாற்றங்களை ஈரான் மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சர்வதேச அணுசக்தி முகமையின் தூதுக்குழு ஈரானுக்கு வர உள்ளதாகவும் கூறினார்.

அணுசக்தி ஒப்பந்தத்தின் செயல்முறையை தொடர ஈரான் மற்ற தரப்புகளுடன் ஆக்கப்பூர்வமான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சில நாடுகள் பேச்சுவார்த்தை உள்ளிட்ட செயல்முறைகளை தடுக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அணுசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து ஈரான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் ஈரான் ஏற்கனவே ஒருமித்த கருத்தை எட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Next Story