பிரான்சில் மின்சாரம், எரிவாயு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு


பிரான்சில் மின்சாரம், எரிவாயு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு
x

எரிசக்தி பிரச்சினையை சமாளிக்க நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு, அங்கு அடுத்த ஆண்டு முதல் எரிபொருள் விலை கட்டுப்பாடு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான வீட்டு கட்டணங்களுக்கு 15 சதவீதம் உச்ச வரம்பு விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதில் எரிவாயு கட்டணத்திற்கான உச்ச வரம்பு ஜனவரியில் இருந்தும், மின்சார கட்டணத்திற்கான உச்ச வரம்பு பிப்வரியிலும் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டிற்கு கிடைத்து வந்த ரஷியாவின் இயற்கை எரிவாயு, கிட்டத்தட்ட முழுமையாக நின்றுவிட்டது என்றும், தற்போது அணு உலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், முன்பு இல்லாத அளவிற்கு எரிசக்தி விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி பிரச்சினையை சமாளிக்கும் வகையில் நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட செயிண்ட் அவோல்ட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை, வரும் அக்டோபர் முதல் அடுத்த 6 மாத காலத்திற்கு மீண்டும் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story