ஜப்பானில் 'ஜி-7' உச்சி மாநாடு தொடக்கம் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு


ஜப்பானில் ஜி-7 உச்சி மாநாடு தொடக்கம் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
x

Image Courtesy : ANI

ஜப்பான் நாட்டில் நடைபெறும் ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் உக்ரைன் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஹிரோஷிமா,

உலகை உலுக்கி வந்த கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான 'ஜி-7 ' அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு மே 19-ந் தேதி (நேற்று) தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டை ஜப்பான் நடத்துகிறது. இந்த மாநாடு நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் உலகத் தலைவர்களாக வலம் வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேனுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்சேல் கலந்து கொண்டுள்ளனர்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடியும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்கத்தில் உக்ரைன் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் உறுப்பு நாடுகள் சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ''ஜி-7 அமைப்பின் தலைவர்களான நாங்கள், உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சட்டவிரோதமான, நியாயம் இல்லாத, தூண்டப்படாத ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஒன்றாக நிற்பதற்கு எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம். ஐ.நா. சாசனத்தை ரஷியா வெளிப்படையாக மீறி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.

ரஷியா மீதான பொருளாதாரத்தடை மேலும் இறுக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாள் மாநாட்டில் மொத்தம் 10 அமர்வுகள் இடம் பெறுகின்றன. மாநாடு தொடங்குவதற்கு முன்பாக ஹிரோஷிமா நினைவுச் சின்னமாக திகழ்கிற பூங்காவுக்கு ஜோ பைடன், மேனுவல் மேக்ரான், புமியோ கிஷிடா, ஒலாப் ஸ்கோல்ஸ், ரிஷி சுனக் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர். இந்த மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு நடந்தால், உக்ரைன் போருக்குப் பின்னர் இவ்விரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது முதல் முறையாக அமையும். மேலும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story