இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்


இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்
x

Image Courtesy : AFP

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஜெருசலேம்,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. இஸ்ரேல் போலீசாரால் கைது செய்யப்பட்டு அந்த நாட்டு சிறைகளில் அடைக்கப்படும் பாலஸ்தீனர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேல் போலீசாரால் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவரான காதர் அட்னான் (வயது 45) கடந்த 3 மாதங்களாக சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தார். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிறையில் உயிரிழந்தார்.

இது பாலஸ்தீனர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிகள் காதர் அட்னான் உயிரிழந்த அடுத்த சில மணி நேரத்தில் இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

காசாவில் இருந்து 3 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், அவை திறந்த வெளி மைதானங்களில் விழுந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. மேலும் இதற்கு பதிலடியாக காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. அதன்பிறகும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அடுத்தடுத்து 22 ராக்கெட்டுகளை வீசி எறிந்தனர்.

அவற்றில் 6 ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், 16 ராக்கெட்டுகள் தரையில் விழுந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்ட்டது. மேலும் இந்த ராக்கெட் தாக்குதலில் பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், வெளிநாட்டினர் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story