ஹமாஸ் அரசியல் இயக்கம்... ஐ.நா. அதிகாரியின் சர்ச்சை பேச்சுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்


ஹமாஸ் அரசியல் இயக்கம்... ஐ.நா. அதிகாரியின் சர்ச்சை பேச்சுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்
x

ஐ.நா. பொது செயலாளர் அன்டனியோ கட்டிரஸ் ஒன்றும் தெரியாதவர் போல் தொடர்ந்து பாசாங்கு செய்து வருகிறார் என இஸ்ரேல் மந்திரி கூறியுள்ளார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபரில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரம் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளரான மார்ட்டின் கிரிபித்ஸ் கூறும்போது, ஹமாஸ் அமைப்பு ஒரு பயங்கரவாத குழு இல்லை. உங்களுக்கு தெரிந்தது போன்று, எங்களுக்கு இது ஓர் அரசியல் இயக்கம் என கூறினார்.

அவரது இந்த பேச்சுக்கு இஸ்ரேல் வெளியுறவு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ஐ.நா. அமைப்பு ஒவ்வொரு நாளும் தரம் குறைந்து வருகிறது. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற உண்மையை ஐ.நா. அதிகாரி மறுக்கிறார்.

அதனை ஓர் அரசியல் இயக்கம் என அழைக்கிறார். ஐ.நா.வின் பொது செயலாளர் அன்டனியோ கட்டிரஸ்சும் ஒன்றும் தெரியாதவர் போன்று தொடர்ந்து பாசாங்கு செய்து வருகிறார். ஹமாசை நாங்கள் ஒழிப்போம். யூதர்களின் ரத்தம் மலிவானதல்ல என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான் கூறும்போது, நூற்றுக்கணக்கான குடிமக்களை கொடூர கொலை செய்தது பயங்கரம் இல்லையா? பெண்களை திட்டமிட்டு பலாத்காரம் செய்தது பயங்கரம் இல்லையா? யூத படுகொலை முயற்சி பயங்கரம் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளதுடன், கிரிபித்சை ஒரு பயங்கரவாத கூட்டாளி என கூறியுள்ளார்.


Next Story